"ஊகமனுபவம் . . . போதும்" - (பொருந்துமாறு கொள்ளும்) உய்த்துணர்வும் (உணர்வுடன் ஒன்றுவதாகிய) பட்டறிவென்னும் அனுபவமும், நூலும் என்னும் மூன்றுக்கும் ஒக்கும் மேலோதியவை இருபொரு ளுண்மையும், ஒரு பொருளுண்மையும் கொள்கையாக்கொண்டொழுகும் இருதிறத்தார்க்கும் ஒக்கும். அவர்கள் தம் உடம்பாடுமாகும்.
"ஆதலின் . . . உண்டோ" - அவ்வாறிருத்தலினால் அடியேனுக்கு இனிமேல் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் செந்நெறிப் படி முறைகளே அமைவதாகும். அடியேன் ஏதாவதொரு பொருளை அழுத்தமாக நினைப்பேனாயின், எளியேன் அவ்வண்ணமேயாதல் திண்ணம்; (அதனால் அடியேன்) உன்னை நின் திருவருள் துணையால் யான் என்று பாவிப்பேனாயின் புணர்ப்பு நிலையாம் அத்துவிதநன்னெறி எய்துவேன். அடிகள் தம் பெருந்தண்ணளி, ஒருவர் திருவருளால் நும்மை யாதொன்றாகப் பாவிக்கினும்-உள்கினும் அவ்வாறே தோன்றியருளும் தன்மையை உடையை. அங்ஙனம் எழுந்தருளிவரும் எந்தையே, அடியேனாக நும்மைப் பாவித்த காலத்து அங்ஙனம் எழுந்தருளிவருவதால் நும்முடைய திருவடிக்கு யாதொரு குறைபாடும் உண்டாகுமோ? (இல்லையென்றபடி.)
"இகபரமிரண் . . . பொருளே" -
(வி - ம்.) வேதம் - மறை. ஆகமம்-முறை. புராணம் - பழைமை. இதிகாசம் - மன்னர் வரலாறு. கலைகள் - பலவகையான நுண்ணுணர்வுக் கலைகள். அத்துவிதம் - புணர்ப்பு. துவிதம் - இருதன்மை, ஊகம் - யுத்தி; பொருந்துமாறு. அனுபவம் - நுகர்வுணர்வு; பட்டறிவு. வசனம் - நூல்.
பாவனை யென்பது பாவிப்போன் பாவிக்கப்படும் பொருளுடன் பிரிப்பின்றி ஒன்றாய்ப் புணர்ந்து அதன்கண் அடங்கி அதுவாய்நிற்கும் நிலை. அஃநாவது ஒருவர் நுகர்வுப் பொருளைக் காண்பது துவிதம். நுகர்வது அத்துவிதம். இனிப்புப் பொருளாகிய கட்டியினைக் கண் காண்பதும், கைஎடுப்பதும் வேறாகும் இருநிலையாம். ஆனால், நாவினுடன்கூடி நுகர்வது இரண்டற்ற ஒன்றாம் புணர்ப்பு நிலையாம். மேலும் நீரிற் குழைத்த திருவெண்ணீற்றுப் பூச்சினுள் ஒருவர் உடம்பு அடங்கி அத் திருவெண்ணீற்றின்பத்தினை அவ்வுடம்பு எய்தும். அப்பொழுது அவ்வுடம்பு திருவெண்ணீறாகவே காணப்படும். அவ்வுடம்பு வேறாகக் காணப்படாமைபற்றி உடம்பு அழிந்தொழிந்ததென்று அறிவுடையார் எவரும் கொள்ளார் அத் திருவெண்ணீற்றை அழிக்காது அவ்வுடம்பினைப் பிரிக்கவும் முடியாது. அத் திருவெண்ணீற்றை அணிய எடுக்குங்கால் கொண்டமை போன்று உருவாய் வேறு பிரித்தெடுத்தலும் முடியாது. எனவே, புணர்ப்பு நிலை யாண்டும் பிரிக்கவொண்ணாப் புணர்ப்பேயாம். இவற்றை வருமாறுணர்க :
| நீறணையும் மேனியந் நீறாக வேதோன்றும் |
| ஆறணையாண் டான்றாள் அணைவு. |
மேலும் பாவிப்போன் அப்பொருளாக நிற்றல் என்பது, அப்பொருளினடங்கி அதன்வழி இயங்குவதாம். கல்வியின் சீர்சிறப்போர்ந்து பாடம் மனத்துக்கொண்டோன் அப்பாடமாயே நிற்பன்.