(பொ - ள்) "காகமா . . . . . . வல்லதோ" - (கரவாது கரைந்துண்ணும் கடப்பாட்டியல்புகாட்டும்) காக்கைகள் கோடிக்கணக்காகக்கூடி ஒருங்கு நின்றாலும் ஒரு கல்லெறியப்பட்டபொழுது அக் கல்லின் முன் எதிர்த்து நிற்கலாற்றுமோ? (அதுபோல்) அடியேன் முற்காலங்களில் கோடிக்கணக்கான தீவினைகளைச் செய்திருந்தாலும், உன்னுடைய பெருந்தண்ணளியாகிய திருவருட் பெருவெள்ளப் பெருக்கின்மேல் வீடாய்த்து நாடிக்கொண்டிருப்பார்முன் அவ்வினைகள் அடர்த்து நிற்கும் வன்மையுடையவோ?
"தமியனேற் . . . வரவில்லை" - எவ்வகைத் துணையுமில்லாத ஏழையேற்குத் திருவருட் பெருவேட்கையோ ஒரு சிறிதும் இல்லையென்பது வேட்டவெளியாகிவிட்டது. (எனவே) வினைகளனைத்தும் கட்டுப்பாடாக ஒருங்குகூடி எளியேன் உடம்பினை இன்னலுறுத்துகின்றன; வாட்டி வதைக்கின்றன; அக் கொடுந்துன்பங்கள் அடியேன்பால் நெருங்காமல் அகத்தவமாகிய யோக நன்னெறி கைகூடவுமில்லை;
"சகச . . . முற்றுறாதோ" - நிட்டைப்பழக்கம் முற்றி, வழக்கமாய் இயல்பாம் நிலையாகிய சகச நிட்டைக்கும் எளியேனின் உரமில் மனத்திற்கும் நீண்ட தொலைவுண்டு; அடியேன் நின்னுடன் புணர்ப்பாய் ஒற்றித்து நிற்குநாள் எந்தநாளோ? இந்நாளில் அப் பேறு முற்றுறாதோ?
"இகபரமிரண் . . . பொருளே" -
(வி - ம்.) கோடி - முடிந்தஎண்; நூறு நூறாயிரம். கர்மம் - வினை. கருணை - தண்ணளி. தாகம் - விடாய்; பெருவேட்கை. சந்கேதம் - கட்டுப்பாடு. தேகம் - உடம்பு.
கல்லின் முன்னில்லாக் காகநிலைக்கொப்பு வருமாறு :
| "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை |
| நாகம் உயிர்ப்பக் கெடும்." |
| - திருக்குறள், 763. |
வினைக்கொடுமை நெருங்காதகலுவதற்கு வேண்டுவ வருமாறு :
| "யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் |
| இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத் |
| தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்றான் நேரே |
| தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும் |
| நான்செய்தேன் எனுமவர்க்குத் தான்அங் கின்றி |
| நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் |
| ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால் |
| ஒருவருக்கும் யான்எனதிங் கொழியா தன்றே." |
| - சிவஞானசித்தியார், 10. 1 - 1. |