உழலும்படி விதித்தற்கு முறைமை யாது என வினவின்? (அவன் சிறிதும் தடையின்றி) உன்னுடைய வினைப்பகுதியினால் ஏற்பட்டதென்பன். அவ்வினையோ அறிவில்லாத தொன்று. அதனால் அஃது பேசும் ஆற்றலுடையதன்று. (அது) நிற்க. மேலும் (மனமுண்டாகவே எல்லாம் உண்டாகும் ஆதலால்) அம் மனத்தை நாடி உசாவில் அம் மனமும் பேச அறியாத்தன்மையுடையது (அதனால்) அம் மனத்தினிடமாக நின்று அறிவது சுட்டறிவு. அதனை வினவின்? அவ்வறிவு (முதல்வனே) நீ விளக்க விளங்கும் இயல்புடையது;
"பொய்யன்று . . . யாட்டி" - அடியேன் மேலுரைத்தவை யாவும் பொய்யல்ல மெய்ம்மையே, (கலந்து நீக்கமற நிறைந்து) போக்குவரவு இன்றிப் புணர்ந்து நின்று நிகழ்த்துவிக்கும் நீ யென்று தெய்வத்தன்மைபொருந்திய செந்தமிழ்த்திருமா மறையோதும்; தாங்குவதும் தாங்கப்படுவதுமாகத் திகழ்ந்து முழுமையாக நிற்பதும் நீயே ஆதலால் இவ்வுலகின்மீது எளியேனை ஆட்டுவித்து;
"ஆடல் கண் . . . காண்" - ஆடல்கண்டருள்பவனும் நீயே, ஆடுகின்றவனும் நீயே. அனைத்தருளும் நீ, பேச்சற்ற சிவகுரவனாய் எழுந்தருளிவந்தாண்ட மோன ஞானக்கொடையாளனும் நீ, ஈன்று வளர்க்கும் தாயும் நீ, தோன்றித்துணைநின்று காக்கும் தந்தையும் நீ, (துய்ப்பனவாகிய) நெல்லும் பொன்னும் முதலாகிய உலகியற் பொருள்களும் நீ, நீங்கா உறவினர்களும் நீயே யாவை;
"சர்வபரி . . . சிவமே" -
(வி - ம்.) வேதா - நான்முகன்; படைப்போன். விதித்தது - படைத்தது. வினைப்பகுதி - வினைக்கூறு. போதம் - அறிவு. தெய்வமறை - செந்தமிழ்த்திருமாமுறைகள், ஆதாரம் - தாங்குவது. ஆதேயம்-தாங்கப்படுவது. தமர் - உறவினர்.
நான்முகன் மறையோதிப் பிறர்க்கு ஓதுவிக்குந் தொழிலுடையன்; அதனால் மறையோன் எனவும், வேதா எனவும் வழங்கப்படுவன். உலகமும் உலகியற் புலன்களாகிய பொருள்களும், உயிரும், அவ்வுயிர்கட்கு உறுதுணையாம் தாய்தந்தை முதலிய உறவினரும் அனைத்தியக்கமும் சிவபெருமானின் வேறல்ல வென்பது அவன் ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணர்ந்து நின்று யாண்டும் இயக்கும் இயல்புண்மையாற் கூறும் ஏற்றுரையாம். ஏற்றுரை - உபசாரம். எல்லாம் நீ என்றிறையையாம் வழங்கல் அன்னவன்றாள், அல்லால் உலகியங்காவாறு. மேலும் "ஆடுகின்றவனும் நீ" என்பது சிவபெருமான் தன் பேருணர்வின்கண் உலகமும் உயிரும் ஆடவேண்டுமெனக் கொள்ளும் திருக்குறிப்பேயாம்.
சிவபெருமானின் சிற்பரவியோமம் எனப்படும் திருச்சிற்றம்பலமாகிய அறிவுப் பெருவெளியே யாண்டுமாதலால் அச் சிவபெருமான் தாங்குவோன் ஆகவும் தாங்கப்படுவோனாகவும் சாற்றப்படுவன். மேலும், ஆருயிரின் அடையாளமாகிய திங்களினைத் திருச்சடைமீது கொண்டிருப்பதால் அவன் தாங்குவோனாவன். அவன் ஏறுர்ந்து வந்து இன்னருள் புரிதலால் தாங்கப்படுவோனும் ஆவன். இவற்றை வருமாறு நினைவுகூர்க :