(பொ - ள்) "கொந்தவிழ் . . . போதும்" - கொத்துக் கொத்தாக மலர்கள் விரிந்து நறுமணங் கமழும் சோலைகளின் நடுவே (இன்பந் தரும்) நல்ல நீழலிலே கழிமகிழ்வோடு உறையினும், குளிர்ந்த இனிய நன்னீரை இருகையானும் அள்ளி உட்கொண்டாலும், அந்நீரிலே மூழ்கிக் குடைந்தாடினாலும், இன்பந்தரும் இளமங்கையர் உள மகிழ்வுடன் வந்து உலவுகின்றனர் என்று சொல்லும்படி மிகக் குளிர்ந்த சந்தனமரத்திடைப் பட்டு அம் மணத்துடன் வந்து வீசுங்காற்று நிறைந்துள்ள பெரிய முற்றத்திடத்தே உவந்துலவும் வாய்ப்புப் பெற்ற போதும்;
"வெள்ளை . . . வேளையிலும்" - வெண்மை நிறத்துடன் வட்டமும் பொருந்திய முழுமதியானது பட்டப்பகல் போல் நிலவுவீச (நிலா முற்றத்தின்கண்) அந்நிலவின்பந் துய்த்து மகிழும் போதும், பாற் கடலமிழ்து வியப்புற வந்து அறுசுவை யுண்டியொடு கலந்த தென்று சொல்லும்படியான சுவையமிழ்து சுவைத்துண்ணும் பொழுதிலும்;
"மாலை . . . ரட்சைபுரிவாய்" - நறுமணமாலையும், பெருமணச் சந்தனமும், வெற்றிலையும், பாக்கும் வேண்டியபடி பெற்று மகிழ்ந்து இன்புற்றுக் கண்துயில்கொள்ளினும், எப்பொழுதும் நின்திருவருளை மறவாத வரந்தந்தருளி (உன்பற்றொழிய ஒரு பற்றுமில்லாத)1 எளியேனைக் காத்தருள்வாயாக;
"சர்வபரி . . . சிவமே" -
(வி - ம்.) கொந்து - கொத்து. வைகினும் - தங்கினும்; உறையினும்; வசிப்பினும். சந்தவாடை - சந்தனமணம். வாடை - மணம். வேலை - கடல்; பாற்கடல். வெள்ளிலை - வெற்றிலை. அடைக்காய் பாக்கு. விளையாடி - இன்புற்று. ரட்சை - காவல்.
மறவாமையான்வரும் மாண்பு வருமாறுணர்க :
| "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி என்மனத்தே |
| வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே |
| தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் |
| செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே" |
| - 4. 95 - 8. |
| "பொய்யா நரகம் புகினும் துறக்கினும் போந்துபுக்கிங் |
| குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பவென்று |
| நையா விளியினும் நானில மாளினு நான்மறைசேர் |
| மையார் மிடற்றா னடிமற வாவரம் வேண்டுவனே." |
| - 11. சேரமான், பொன்வன் - 98. |
(11)
1. | 'முன்னே,' 4, 113 - 3. 'தக்கார்வ.' 6. 96 - 9. 'எந்நிலையில்' 12. சாக்கியர் - 6. 'நின்றானும்.' 12 பத்தராய்ப் - 7. |