புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில் | பொலிவுற இருக்குமியல்பும் | பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும் | பூமண்ட லாதிக்கமும் | மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம் | மாலுமொரு சுட்டும்அறவே | வைக்கின்ற வைப்பாளன் மௌனதே சிகனென்ன | வந்தநின் னருள்வழிகாண் | சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே | சுருதிமுடி வானபொருளே | சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள் | சுரந்துபொரு கருணைமுகிலே | சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே | தேடரிய சத்தாகிஎன் | சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே | தேசோ மயானந்தமே. |