ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட | ஒளியாகி வெளியாகி உருவு மாகி | நன்றாகித் தீதாகி மற்று மாகி | நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி | இன்றாகி நாளையுமாய் மேலு மான | எந்தையே எம்மானே என்றென் றேங்கிக் | கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக் | கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. |
(பொ - ள்) "ஒன்றாகிப் . . . நண்ணாதாகி" - (சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நிற்கும் சீர்மையன். அதனால் பொருள் தன்மையில்) ஒன்றாகியும், ஆருயிர்களுடனும் அளவிலா அண்டங்களுடனும் கலந்து இயைந்து இயக்குதலால் பலவாகியும், பலவேறு வகைப் பொருள்களுக்கும் அகம்புறமாய் ஒளி கொடுத்துக்கொண்டிருந்தருளும் பேரொளியாகியும், அவற்றுக்கு இடங்கொடுக்கும் வெளியாகியும் அவ்வொளிகளின் வடிவங்களாகியும், ஆருயிர்கள் புரியும் இருவினைக்கீடாக அவற்றின் பயன்களைக் கூட்டுவிக்கும் முறையால் நன்றாகியும் தீயதாகியும், இன்னும் பல வேறுவகையாகக் காணப்படும் உலகியற் பொருள்களோடு நீங்காது விரவி நிற்றலின் அவையும் ஆகியும், ஒடுக்கமுடன் தோற்றங்கள் ஒரு சிறிதும் தனக்கு வந்து பொருந்துதல் இல்லாத நிலைமையனாகியும்;
"இன்றாகி . . . விண்ணே" - காலமெய் எனப்படும் காலதத்துவத்தை இயக்கும் இயல்பினால் இன்றெனவும் நாளையெனவும் சொல்லப்படும் நாள்களுமாகியும், அதன்மேலும், கிழமை, திங்கள் பருவம், ஆண்டு முதலிய காலங்களுமாகித் திகழ்கின்ற எந்தையே! எளியேங்கள் தலைவனே! என்று பலவாறு பரிவுடனழைத்து ஏக்கம் எய்திப் புனிற்றுக் கன்றின் நிலைமையினை எய்திக் கதறுதல் நீங்காத எளியேங்கட்கு, ஈன்றணிய செம்மை நிறம் வாய்ந்த கறவையாகி வல்விரைவில் வந்து வேண்டும் திருவருள் புரியும் பெருந்தண்ணளி வாய்ந்த பேரருள் வெளியே. புனிற்றுக் கன்று - ஈன்றணிய கன்று.
(வி - ம்.) வெளி - போக்குவரத்துக்கு இடங்கொடுத்து நிற்கும் வெளி. நாசம் - ஒடுக்கம்; அழிவு. சேதா - சிவப்புப் பசு. கடிது - விரைவு. கருணை - தண்ணளி. கறவை - பாற்பசு.
இறைவன் எல்லாமாய் நிற்கும் முறைமை "இரு நிலனாய்த் தீயாகி" (பக்கம் 148.) என்னும் நின்ற திருத்தாண்டகத்தா னுணரலாம். "நீலம் நீர்" எனத் தொடங்க வேண்டியது நிலன்தீ எனத் தொடங்கப்பட்டுள்ளது. இதே முறையில் தொல்காப்பியத்துள் வருவதூஉம் காண்க :