எண்ணத்தியைபில்லை; ஐம்புலப் பொருள்களின் தோற்றமில்லை; முதல்நடு முடிவாகிய நிலைமையொன்றுமில்லை; உள்ளென்றும், புறமென்றும் வேறுபாடு யாதுமில்லை; உலகியற்றொடர்பு ஏதுமில்லை!1
(20)
இல்லைஇல்லை யென்னினொன்று மில்லா தல்ல
இயல்பாகி என்றுமுள்ள இயற்கை யாகிச்
சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத்
தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூப மாகி
அல்லையுண்ட பகல்போல அவித்தை யெல்லாம்
அடையவுண்டு தடையறவுன் அறிவைத் தானே
வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு
வேதகமாய்ப் பேசாமை விளக்குந் தானே.
"இல்லையில்லை . . . சொரூபமாகி" - இல்லை இல்லை என்று கூறுவன எல்லாம் பாழென்பதன்று; (கடவுட்கு வேறாக அவர்தம் திருவாணைக்கு அடங்காது நிற்கத்தக்கது ஏதுமில்லை அதனால்) எல்லாம் கடவுளை விட்டுக் காணப்படும் முதற் பொருள்களில்லை; அப்பொருள்கள் காரணகாரியத் தொடர்பாய் என்றும் உள்ள இயற்கைப் பொருள்களாகிச் சொல்லுதற்கரிய தன்மையுடையதாய், (ஆருயிராகிய) யான் என்றும் (பேருயிராம் சிவமாகிய) தானென்றும், புணர்ப்புவிட்ட நீக்கநிலை தோன்றாமல்; எல்லாவற்றையும் தன்னுள் அடக்குதலெனப்படும் விழுங்குதலாகிய2 உண்மையாகி;
"அல்லையுண்ட . . . விளக்குந்தானே" - இருளையடக்கித் தானாகத் தோன்றும் பகற்பொழுதைப் போன்று, ஆருயிர்களின் அறியாமையைச் செய்யும் ஆணவத்தை அறவே அடக்கி, எவ்வகைத்தடையு மில்லாமல் உன்னறிவைத் தானாகவே வெல்லும் பொருட்டுத் தன்னுள் அடக்கி, உன்னையும் தன்வண்ணமாகச் செய்து (மலமாயை வினைத்தொடர்புகளினின்று) வேறுபடுத்தி உன்பால் பேசாதிருத்தலாகிய பெருநிலையை உண்டாக்கும்.
(வி - ம்.) இல்லை எனக்கூறலும் கற்பனை எனக் கூறலும் கடவுளுண்மை கொள்வார்க்கு யாண்டும் பொருந்துவ தின்றாம். செம்பொருட்டுணிவாம் சித்தாந்தத்தின்கண் முப்பொருளுண்மை எப்பொழுதும் உண்டென்பதேயாம். ஆனால், திருவடி நினைவுமாறா வுயிர்க்கு உலகியற்றொடர்பும் தோற்றமும் இல்லையென்பதேயாம். கற்றுப்புறம் போந்த புலவனுக்குக் கல்லூரித் தொடர்பின்மையும், உறங்குகின்றவனுக்கு உணர்வின்கண் படுக்கை உறையுள் முதலியவற்றின் தொடர்பின்மையும் இதற்கொப்பாகும்.