பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

310
     "தடையுற்றான் . . . பரிசினானே" - இங்ஙனம் அடியேன் தடையுற்று நின்றால் மேல் அடைய வேண்டிய வழிப்பேறும் தடைப்படுமே; இங்ஙனம் அமைவதற்கு அடியேன் செய்துள்ளதாகிய இருவினைப் பயனால் வரும் ஊழ்வலியோ? அல்லது உன் திருவருட்கூத்தோ? அல்லது, இங்குத் துணையேது மில்லாது தனித்து நிற்கும் எளியேன் மேற்குறையோ? உணர்த்தியருள்வாயாக; இன்னமும் பாழான துன்பத்தினை அடியேன் படமுடியாதென்றே கூறலாம்; எல்லாப்பொருள்களையும் படைத்துக் காத்துத் துடைத்தருளும் பண்பமைந்த பரம்பொருளே!

     (வி - ம்.) மாயாகாரியப் பொருள்களை மாயம் என வழங்குவது கற்பனை யென்றோ, இல்பொருளென்றோ, கானல் நீரென்றோ கருதியன்று. ஒளியுடைய விளக்கு மிக்க புகையடைந்த மேன்மூடியால் விளக்கங்குன்றியிருப்பது போன்று, விளக்கந்தரவந்த மாயாகாரியப் பொருள்கள் பண்டே உயிர்களை ஒட்டியுள்ள ஆணவமல இருட்சார்பால் மயக்குகின்றது. அதுபற்றியே அதனை மாயம் என்பர். வாழ்வு மாயம் என்னும் உண்மை வருமாறு :

"வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
 பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
 தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்
 கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே."
- 7. 78 -
(4)
 
நானானிங் கெனுமகந்தை எனக்கேன் வைத்தாய்
    நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி
ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய்
    உயிரெனவு மென்னையொன்றா வுள்ளேன் வைத்தாய்
ஆனாமை யாயகில நிகில பேதம்
    அனைத்தினுள்ளுந் தானாகி அறிவா னந்தத்
தேனாகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல்
    செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த வொன்றே.
     (பொ - ள்) "நானானிங் . . . வைத்தாய்" - (இறைவனே!) எதனிலும் நான் நான் என்று முனைத்துநிற்கும் ஆணவக் கொடுமையினை என்னிடத்து ஏன் வைத்தனை? அவ்வாணவமலங்காரணமாக விளையும் நல்வினை யென்றும், தீவினை யென்றும் சொல்லப்படும் இரு வினைகளை நடுவாக நாட்டி. ஊன்நிறைந்த இந்த உடற்சுமையை என்மீது பாரமாக ஏன் வைத்தனை? எனக்கு உயிரென ஒருபெயரிட்டு, அவ்வுடம்பினுள் ஒரு பொருளாக ஏன் வைத்தனை?

     "ஆனாமை . . . ஒன்றே" - ஒப்பில்லாத ஒரு பெரும் பரம்பொருளாம் முதல்வனே! நீ காணப்படும் உலகம் எங்கணும், நீக்கமற நிறைந்து நிற்கின்றாய்; எல்லாப் பொருள்களினுள்ளும் உன்னையன்றி வேறொன்றில்லா