இவ்வுலக வாழ்வினுக்கே வேட்கையுற்று மனம்வைத்தேன். அடியேனை ஆண்டருளும் நம்பியே! நீ தண்ணளி புரிந்து வாவென் றழையா விடின் எளியேன் செய்வது என்னாம்.
(11)
செய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும் | ஐய நின்னதென் றெண்ணும் அறிவின்றி | வெய்ய காம வெகுளி மயக்கமாம் | பொய்யி லேசுழன் றேனென்ன புன்மையே. |
(பொ - ள்) (திருவருளால் பெற்ற நின்னுடைமையாகிய இவ்வுடம்பினின்று நின் அடிமையாகிய யான்) அருட்டுணையால் செய்கின்ற செயல்களும், நாடுகின்ற நாட்டமாகிய எண்ணமும், ஐயனே! நின் திருவடிக்குரியன என்று எண்ணும் நல்லறிவின்றி கொடிய காம வெகுளி மயக்க மென்னும் நிலையிலா உலகியற்சுழலிலே பட்டு நீங்கா துழல்கின்றேன். அந்தோ! எளியேனின் தாழ்வு நிலையாகிய புன்மையினை என்சொல்கேன்? புன்மை நிலையின் உண்மை வருமாறு:
| "காமம் வெகுளி மயக்க மிவைகடிந் |
| தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி |
| ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர் |
| தாம மதனைத் தலைப்பட்ட வாறே." |
| - 10. 2397. |
| "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் |
| நாமங் கெடக்கெடு நோய்." |
| - திருக்குறள், 360. |
(12)
புன்பு லால்நரம் பென்புடைப் பொய்யுடல் | அன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ | என்பொ லாமணி யேஇறை யேஇத்தால் | துன்ப மன்றிச் சுகமொன்றும் இல்லையே. |
(பொ - ள்) இவ்வுடம்பானது, அருவருக்கத்தகுந்த இழிவான இறைச்சியாகிப் புலாலையும், எலும்பையும் பிறவற்றையும் கொண்டு யாக்கப்பட்ட நீர்க்குமிழிபோல் நிலையில்லாத தாகும். திருவடிக்கு அன்பு பூண்டொழுகும் செம்மனச்செல்வர் அனைவர்க்கும் விரும்பத்தகாத தாழ்வினையுடைய தல்லவோ இது? எளியேனை ஆட்கொண்டருளும் (தானாகத் தோன்றியருளும்) தனிப்பேரொளி மணியே! முதல்வனே! இத்தகை உடம்பால் யாண்டும் துன்பமேயன்றி இன்பம் ஒரு சிறிது மில்லையே? உடம்பின் உண்மை வருமாறு:
| "நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ |
| தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன் |