பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

330
நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
செஞ்செ வேநின்ற சிற்சுத வாரியே.
     (பொ - ள்) மெய்யன்பால் உள்ளம் தெள்ளத்தெளிய விழைந்து வழிபட்டு நின்ற மார்க்கண்ட மாமுனிவர்க்கு அஞ்சேல் என்று புகலளித்தருளி, (அவன் பொருட்டுக் கூற்றுவனை உதைத்தருளினை) காத்து ஆண்டமையை அடியேன் அறிந்தே, நின்னைப் புகலெனக் கொண்டு நின்திருவடியடைந்தேன். எங்கும் நீக்கமறச் செவ்விதாக நிறைந்து நின்றருளும், (உண்மை) அறிவின்பப் பெருங்கடலே!

(17)
 
வாரி ஏழும் மலையும் பிறவுந்தான்
சீரி தானநின் சின்மயத் தேஎன்றால்
ஆரி லேயுள தாவித் திரளதை
ஓரி லேன்எனை ஆண்ட ஒருவனே.
     (பொ - ள்) கடல்கள் ஏழும், மலைகள் எட்டும், வேறுபல உலகியற் பொருள்களும், சீர்சிறப்புமிக்க நின் திருவருள் வெளியின் கண் நிலைத்திருப்பன வென்றால், ஆருயிர்க்கூட்டங்கள் நின்னருளையன்றி வேறு எவர்பால் நிலைநிற்கும்; அடியேனை ஆட்கொண்டருளிய ஒப்பில்லாதவனே! இவ்வுண்மையினை எளியேன் உணர்ந்திலேன்.

     இவ்வுண்மை வருமாறு :

"கற்றநூற் பொருளுஞ் சொல்லும் கருத்தினி லடங்கித் தோன்றும்
 பெற்றியுஞ் சாக்கி ராதி உயிரினிற் பிறந்தொ டுக்கம்
 உற்றதும் போல எல்லா உலகமும் உதித்தொ டுங்கப்
 பற்றொடு பற்ற தின்றி நின்றனன் பரனும் அன்றே."
- சிவஞானசித்தியார், 1. 2 - 3.
(18)
 
ஒருவ ரென்னுளத் துள்ளுங் குறிப்பறிந்
தருள்வ ரோஎனை ஆளுடை அண்ணலே
மருள னேன்பட்ட வாதை விரிக்கினோ
பெருகு நாளினிப் பேச விதியின்றே.
     (பொ - ள்) பெருமைமிக்க முதல்வனே! நின்னையன்றி அடியேன் உள்ளத்தின்கண் எண்ணும் எண்ணத்தை அறிந்து, அதற்கு வேண்டுவன பிறர் அருள்வரோ! எளியேனை ஆட்கொண்டருளும் எம்மானே! மயக்க மிக்குள்ள யான் அம் மயக்கத்தால் படும்