பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

337
பொருள்களை நிலையென நினைந்து சார்ந்து மயங்கி யொழுகும் பொய்யுடையனாய எளியேற்கு நிலைத்த புகலிடம் வேறெங்குளது? (நின் திருவடியையன்றி வேறு எங்கும் புகலிடம் இன்றென்பதாம்.)

     இவ்வுண்மை வருமாறு :

"போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
 போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
 போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
 போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி."
- 8. திருச் - 62
(31)
 
எங்ங னேஉய்ய யானென தென்பதற்
றங்ங னேயுன் அருள்மய மாகிலேன்
திங்கள் பாதி திகழப் பணியணி
கங்கை வார்சடைக் கண்ணுத லெந்தையே.
     (பொ - ள்) அடியேனுக்குத் திருவருளால் யான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் அற்றொழியவில்லை; அதனால் நின் திருவருள் வண்ணமாம் பேறு பெற்றிலேன்; இனி எவ்வண்ணம் எளியேன் உய்வேன்: குறைமதியாகிய திங்கள் ஒளிதிகழ்ந்து விளங்கவும், பாம்பினை அணிந்தும் வான்புலனாகிய கங்கையையும் இடையறாமல் திருச்சடையின்கண் யாண்டுந் தாங்கி விளங்கும் கண்ணுதல் எந்தையே!

     (வி - ம்.) கண்ணுதல் - கருதுதல். சிவபெருமான் ஒப்பில் திருத் தொழில்களைந்தினையும் திருவுள்ளத் திருக்குறிப்பு எனப்படும் சங்கற்பத்தினால் செய்தருள்கின்றனன். அதனால் அவன் கண்ணுதல் என்று அழைக்கப்படுவன். இனி நுதற்கண் எனக் கொண்டு நெற்றிக்கண்ணை உடையவன் என்றலும் ஒன்று.

(32)
 
கண்ணிற் காண்பதுன் காட்சிகை யாற்றொழில்
பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே
அண்ண லேநின் அருள்வடி வாகுமே.
     (பொ - ள்) அடியேன் உலகத்திற் காணப்படும் எல்லாப் பொருள்களினும் திருவருள் நினைவால் உன் மெய்ம்மையினையே காண்கின்றேன்: கையாற் செய்யப்படும் தொழில்கள் அனைத்தும் நின்திருவடிமறவா நாட்டத்துடன் செய்கின்றமையின் அதுவும் நின் பூசையேயாம். இவைபோன்று யான்பேசும் பேச்சுகளும் உன் திருவைந்தெழுத்துச் செந்தமிழ்மந்திரமேயாம். மேலும் மண்முதலாகச் சொல்லப்படும் ஐந்து பூதங்களும், அவற்றுடனிணைந்து வாழ்ந்து வரும் ஆருயிர்கள் அனைத்தும், பெருமைமிக்க பெருமானே! நின் திருவருள் வடிவமாகும். இதற்கொப்புச் செய்தான் கைத்திறம் செயற்படுபொருளில் காண்பதாகும்.

(33)