பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

340
     கல்லினுங்கடிய மனத்தை உருக்குமெய்ம்மை வருமாறு :

"கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
 வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
 கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
 வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
 தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
 ஒல்லை விடையானைப் பாடுதுங்கா ணம்மானாய்."
- 8 திருவம்மானை, 5
(38)
 
கரையி லின்பக் கடலமு தேஇது
வரையில் நானுனை வந்து கலந்திலேன்
உரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்
தரையி லேநடித் தேனென்ன தன்மையே.
     (பொ - ள்) எல்லையில்லாத அளவிறந்த பேரின்பப் பெருங்கடலே! அக் கடலுள் விளையும் ஆரமிழ்தே! இந்நாள் வரையும் அடியேன் உன்னை அணைந்து உன்திருவருளால் உன்னைப் புணர்ந்திலேன். சொல்லொண்ணாத பேரின்பம் பெற்று உண்ணும் பெற்றியர் போல் இந்நிலவுலகில் நாயேன் நடித்துத்திரிவதால் அடையும் தன்மையினை என்ன தன்மை என்பேன்.

     (வி - ம்.) நடிப்பு நாட்டமிக்க பயிற்சிக்கு அடிப்படையாகும்; அப் பயிற்சியின் வழிப் பயன் பெரிதுண்டாம். இவ்வுண்மை வருமாறு :

"நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
 வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
 ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
 ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் முடையானே."
- 8. திருச்சதகம் - 11.
(39)
 
மையு லாம்விழி மாதர்கள் தோதகப்
பொய்யி லாழும் புலையினிப் பூரைகாண்
கையில் ஆமல கக்கனி போன்றஎன்
ஐய னேஎனை ஆளுடை அண்ணலே.
     (பொ - ள்) மைதீட்டிய கண்களையுடைய ஒவ்வாப் பெண்களின் வஞ்சகம் நிறைந்த பொய்மயக்கிலாழும் புன்மைத்தன்மை இந்நாள் மட்டும் அடைந்தது போதும்: மெய்யன்பர்கட்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோன்று வேண்டுவன அருளும் அடியேனுடைய தலைவனே! என்னை ஆளுடைய பெருமைமிக்க பெரியோனே. பூரை - நிறைவு; போதுமானது. தோதகம் - வஞ்சனை.

(40)