இவ்வுண்மை வருமாறு :
| "கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் |
| நற்றாள் தொழாஅர் எனின்" - திருக்குறள், 2. |
(46)
கல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த | தல்லை யொத்த குழலினர் ஆசையால் | எல்லை யற்ற மயல்கொள வோஎழில் | தில்லை யில்திக ழுந்திருப் பாதனே. |
(பொ - ள்) மிக்க பொழில்வளமும் தக்க செந்தமிழ்த்திருமா மறையாகிய திருமுறைத் தெய்வநலனும் ஒருங்கியைந்து அழகு திகழ்கின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் உலகன்னை காண ஐந்தொழி லருட்கூத்தியற்றியருளும் எடுத்த பொற்பாதனே! கற் போன்ற வலிய நெஞ்சமும், கார்நிறத்தையும் அல்லையும் ஒத்த இருண்ட கூந்தலும் உடைய மயக்கும் பெண்களிடம் வைக்கும் மோகம் எனப்படும் பெருவேட்கையால் எல்லையில்லாத மயக்கங் கொள்ளவோ? (அடியேன் பிறந்தது. அன்று என்பதாம்.)
(47)
திருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள் | உருவி ருக்கின்ற மேனி யொருபரங் | குருவை முக்கணெங் கோவைப் பணிநெஞ்சே | கருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. |
(பொ - ள்) திருவருளென்று சிறப்பித்துச் சொல்லப்படும் தெய்வச் செல்வியாம் மலைமகளே திருமேனியாகக் காணப்படும் ஒப்பில்லாத நிறைந்த புகலிடமாகிய மெய்ப்பொருள் குருவென எழுந்தருளிவந்து ஆட்கொண்டருளிய அன்பறிவாற்றலாம் மூன்று திருக்கண்களையுடைய முழுமுதல்வனை நெஞ்சமே இறவாத இன்ப அன்பால் பணிவாயாக. (அங்ஙனம் பணியின்) பணியின் இன்ன மோர் அன்னை வயிற்றுக் கருவில் புகுவதற்குக் காரணமாகிய இருவினைச் செயல்கள் நமக்குண்டாகா.
(48)
கன்ம மேது கடுநர கேதுமேல் | சென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ | என்ம னோரதம் எய்தும் படிக்கருள் | நன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. |
(பொ - ள்) அடியேனுடைய எண்ணங்களனைத்துங் கைகூடும்படி திருவருள் நன்மை மிகுந்து செயும் முக்கட்செல்வ முதல்வன் எளியேனுள்ளத்து மிக்கோங்கி எழுந்தருளியிருக்கும்போது, பிறப்பினைத் தரும் இருவினையேது? தீவினைப்பயனாம் கடிய நரகங்கள் ஏது? இன்னும் மேற்பிறப்பேது? இவையனைத்தும் எளியேனைத் தீண்டக் கடவவோ?