பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

371
கொண்டருளிய சொல்ல வொண்ணாத திருவருட்குணம் எட்டும் உடைய எம்மானே! உன்னுடைய ஒலிக்கின்ற ஆண்மைக்கழலணிந்துள்ள திருவடியினை வந்து சேர்ந்தாலன்றிப் பிறவி வெம்மை தீருமோ? திருவடிக்காதற் பெருவேட்கை தணியுமோ? மருளுட்டும் இருவினைத் துன்பங்கள் அகலுமோ? (குறுகினால் அகலும், அல்லது அகலா தென்பதாம்.)

(7)
தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்கு வாயோ
பானலங் கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங் கிள்ளை காண
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தி னானே.
    (பொ - ள்.) ஆனஞ்சு நல்கும் தீம்பாலின் நலத்தையும் வென்று மொழியும் ஆருயிர் தளிர்க்கும் இனிய மொழியினையுடைய பச்சிளங் கிள்ளையாகிய உமையம்மையார் கண்டுகளிக்கும்படி தில்லைத்திருச் சிற்றம்பலத்தின்கண் திருவருட் டிருக்கூத்தியற்றும் அம்மை அம்பல வாணனே! அறவழியில் ஈட்டிய அரும்பொருளைத் தெய்வம் விரும்புந் திறலோர்க்கு உளமுவந்து வளம் பெற நல்கும் தானமும், நன்னெறி நாற்படியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவென்னும் சிவவழி பாடாகிய நற்றவமும் இன்னதென்றே உணராத எளியேன்பால் முறையே அவற்றின் பயன்களாகிய மெய்யுணர்வும், இறவாத இன்பப்பேறும் அளித்தருள்வையோ?

(8)
நடத்திஇவ் வுலகை யெல்லாம் நாதநீ நிறைந்த தன்மை
திடத்துட னறிந்தா னந்தத் தெள்ளமு தருந்தி டாதே
விடத்திர ளனைய காம வேட்கையி லழுந்தி மாயைச்
சடத்தினை மெய்யென் றெண்ணித் தளரவோ தனிய னேனே.
    (பொ - ள்.) முதல்வனே எல்லாவுலகங்களையும் திருக்குறிப்பால் அசைவித்து அவற்றொடு நீ நிறைந்து நிற்கும் தன்மையினை உறுதிப்பாட்டுடன் உணர்ந்து, உன் திருவடிப்பேரின்பத் தெள்ளமிழ்தினை நுகர்ந்திடாமல், நஞ்சனைய காமவேட்கையி லழுந்தியும், மாயாகாரிய உடம்பினை அழியாது நிலைத்து நிற்கும் என மயங்கிக்கருதியும் அறிவுத்துணை சிறிது மில்லாத தனியாயுள்ள எளியேன் தளரவோ? (இருக்கின்றேன் என்க.)

(9)
தனிவளர் பொருளே மாறாத் தண்ணருங் கருணை பூத்த
இனியகற் பகமே முக்கண் எந்தையே நினக்கன் பின்றி
நனிபெருங் குடிலங் காட்டு நயனவேற் கரிய கூந்தல்
வனிதையர் மயக்கி லாழ்ந்து வருந்தவோ வம்பனேனே.
    (பொ - ள்.) ஒப்பில்லாது ஓங்கிவளரும் மெய்ப்பொருளே, குளிர் மிகுந்த அரிய கருணை பூத்த இனிய கற்பகமே, மூன்று திருக்கண்களையுடைய