(பொ - ள்.) ஆவியின் அறிவினுக்கு அறிவாக நீ நின்றருளுவதால் (வேறாம் பொருளினை அறியுந்தன்மை போன்று) அடியேன் நின் திருவடியினை அறியுந்தன்மை உண்டாமோ? முதல்வனே நீ எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கையினால் அடியேனை விட்டுப்பிரியும் தன்மை உனக்கு உண்டாகுமோ? பெருமானே, நின்திருவடிச் செறிவாம் பேரின்பமதாய் நிறைந்து நிற்கும் மெய்ப்பொருள் நீ (அதனால்) நின்னையல்லாமல் அடியேன் யாண்டும் தனித்து நிற்கும் தன்மையில்லேன். நின் திருவடிப் பெரும்பேற்றை நன்னெறியினின்று முற்றும் ஆய்ந்தால் அப் பேற்றால் அடையும் பயன் அடியேனுக்கேயாம். நினக்கு ஏதுமின்றாம்.1
முதல்வன் அறிவுக்கறிவாய் நிற்கு மியல்பு வருமாறு :
| "அந்நியம் இலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும் |
| உன்னிய எல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும் |
| என்னது யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும் |
| தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன்." |
| - சிவஞானசித்தியார், 63 - 4. |
(4)
எனதென் பதும்பொய் யானெனல்பொய் | எல்லா மிறந்த இடங்காட்டும் | நினதென் பதும்பொய் நீயெனல்பொய் | நிற்கும் நிலைக்கே நேசித்தேன் | மனதென் பதுமோ என்வசமாய் | வாரா தைய நின்னருளோ | தனதென் பதுக்கும் இடங்காணேன் | தமியேன் எவ்வா றுய்வேனே. |
(பொ - ள்.) (திருவடிப் பேறாம் விழுப்பயன் எய்த முதல்வன் திருவருளால் மாயாகாரியமாகப் படைத்தளித்த உலகு, உலகியற் பொருள் உடல்களை நாயன் உடைமை எனவும் நம்பால் அவனால் வைக்கப்பட்ட இரவற் பொருள்களென்றும் எண்ணாது) எனதென எண்ணும் புறப்பற்றும், (இவற்றை) உடையேன் யான் என எண்ணும் அகப்பற்றும் ஆகிய செருக்குகள் நிலைநிற்பனவல்ல. முப்பத்தாறு மெய்யெனப்படும் தத்துவங்கடந்த இடத்தினைக் காட்டும் நின்னுடைய திருவருளும் நிலையில்லாதது. உன்னுடைய திருக்கோலங்களை நீயே என்று கொள்வதும் நிலையில்லாதது. (மாறாநிலையுள்ள நின்திருவடிப்பேற்றில்) நிற்கும் நிலைக்கே காதல்கொண்டேன். மனமென்பது அடியேன் வயப்பட்டு வருமாறில்லை ஐயனே (அம்மனம் என்னைத் தன் வழி ஈர்க்கின்றது.) நின் திருவருளோ தன்னதெனக் கூற இடங்கண்டிலேன், இந்நிலையில் துணையில்லாத் தனியனாகிய அடியேன் எங்ஙனம் உய்வேன்? (நீயே உய்வித்தருளல் வேண்டும்.)
1. | 'தந்ததுன்.' 8. கோயிற்றிருப்பதிகம். 10. |