சுத்தபரி பூரணமாய் நின்மலமாய் | அகண்டிதமாய்ச் சொரூபா னந்தச் | சத்திகள்நீங் காதவணந் தன்மயமாய் | அருள்பழுத்துத் தழைத்த ஒன்றே. |
(பொ - ள்.) மேலாம் நன்மையாகிய யாண்டும் நீக்கமற நிறைவாய் இயல்பாகவே ஒட்டு மலமில்லாததாய், வரையறுக்கப்படாததாய்ப் பேரின்பமே பெருவடிவாய்த் திகழும் திருவருளாற்றல்கள் விட்டு நீங்காவண்ணம், தன்வயமாய்த் திருவருள் கனிந்து செழித்த ஒப்பில்லாத ஒருவனாம் மெய்ப்பொருளே! நத்தும் முத்திறப்புணர்ப்பாகிப் பின்னல் எனப்படும் அத்துவிதமே கிடைத்தற்கரிய பேறென்று அறிந்துகொள்ளும் திறமில்லாமல், யான் எனது என முனைத்து நிற்கும் செருக்கெனப்படும் அகந்தையாகிய பேயோடு, பெரிய மத்தமாகிய உன்மத்தரைப் போன்று மனமானது மாழ்கிக்கிடப்ப, மேலும் மேலும் அடியேன் வருத்த முறுவேனோ?
முத்திறப்புணர்ப்பு : ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் அத்துவிதம். அத்துவிதம் - பின்னல்.
தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க | வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன் | அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ் | சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே. |
(பொ - ள்.) அடியும் முடியும் அரியும் அயனும் தெரிய நினைந்து தேடினும் அறியமுடியாதபடி அழற் பிழம்பாய் நின்ற பெருஞ் சுடர்ப் பிழம்பே! மெய்யடியார்களுடைய தூயவுள்ளத்தின்கண் மிக்கோங்கிப் பொருந்தும், தாயுமானவனெனும் தனிப்பெயர் வாய்ந்த பெருமானே, அடியேனுக்குத் (வெளிப்படத் தோன்றும்) தந்தையும் நீயே, தாயும் நீயே, எளியேனுயிர் ஈடேறத் துணைபுரிய வந்த உயிரினுக்குயிராம் துணையும் நீயே; உள்ளத்துத் தோன்றும் தடுமாற்றமாகிய கவலைகளை நீக்கி ஆட்கொண்டருளும்படி அருளால் எழுந்தருளிவந்த சிவகுருவும் நீயே;
(வி - ம்.) இந்நூலாசிரியரின் திருத்தோற்றம் திருவருளால் இத் திருவூரின்கண் நிகழ்ந்ததென்பர். அதனால் அருந்தவமிருந்து ஈன்றெடுத்த பெற்றோர் இத் திருவூர்க் கடவுட்டிருப் பெயராகிய "தாயுமானவர்" என்னும் தனித்தமிழ்த்திருப்பெயரைச் சூட்டினர்.
முன்னொரு காலத்து இறைவன் இவ்வூரின்கணுள்ள அன்புமிக்க ஓரம்மையாரின் பிள்ளைப்பேற்றுக் காலத்து, அவ்வம்மையாரின் அருந்தவத் தாயர் போன்று திருக்கோலம் பூண்டு வந்து பிள்ளைப் பேற்றுக்குத் துணைநின்று வேண்டுவ புரிந்தருளினன். அதனால் அவனுக்குத் தாயுமானவர் என்னும் தனிப்பெரும் பெயர் வழங்குவதாயிற்று.
அவ்வரலாறு வருமாறு: திரிசிரபுரத்தில் சிவபத்தியிற் சிறந்த செல்வச் செட்டியாரென ஒருவரிருந்தனர். அவர்தம் அருமை