பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

405
வாட்டமில் நெஞ்சங் கிண்ணமாச் சேர்த்து
    வாய்மடுத் தருந்தினன் ஆங்கே
பாட்டளி நறவம் உண்டயர்ந் ததுபோற்
    பற்றயர்ந் திருப்பதெந் நாளோ.
    (பொ - ள்.) அன்பறிவாற்றல்கள் எனப்படும் இச்சை ஞானம் கிரியை ஆகிய மூன்று தன்மைகளும் மூன்று திருக்கண்களாகக் கொண்டு திகழும் செந்நிறம் பொருந்திய மணியே! யாவர்க்கும் யாவைக்கும் நடுவாகக் காணப்படும் நாயக விளக்கே, வஞ்சனை பொய் நடுவின்மை முதலிய குற்றப்பாடுகள் ஏதுமில்லாத நற்குணத்தவர்கட்கு எளிமையாகி விளங்கும் திருவருட்குணம் திகழ்பவனே, குற்றமற்ற அமிழ்தமே, நின்னை உலகியல் வாட்டம் சிறிதுமில்லாத தூய நெஞ்சத்தை அமிழ்த கிண்ணமாக அமைத்து அடியேன் வாயின்கண் வைத்து, அருந்தினனாகி நின்று பண்பொருந்த இன்னிசை பாடும் வண்டின் கூட்டங்கள் மலர்த்தேன் உண்டு தம்மை மறந்து துய்க்குந் தேன் வண்ணமாய்க் களித்திருப்பதுபோல் அடியேன் பற்றற் றிருப்பது எந்தநாளோ? அருந்தினன் : முற்றெச்சம்.

(39)
என்னுடை உயிரே என்னுளத் தறிவே
    என்னுடை அன்பெனும் நெறியாம்
கன்னல்முக் கனிதேன் கண்டமிர் தென்னக்
    கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே உன்னைநான் பிரியா
    வண்ணமென் மனமெனுங் கருவி
தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
    தண்ணருள் வரமது வேண்டும்.
    (பொ - ள்.) அடியேன் உயிர்க்குயிராக விளங்கும் ஒருவனே! எளியேன் உள்ளத்தின்கண் உற்றுறையும் பேரறிவே, அடியேனுடைய அன்பென்னும் அரிய நல் வழியே, கருப்பஞ்சாறும், வாழை, மா, பலா எனப்படும் அறம் பொருளின்ப அறிகுறியாம் முக்கனியே, கற்கண்டே, அமிழ்தே, இனிய தேனே என்று சொல்லும்படி சொல்லொணா இன்பாய்க் கலந்தெனைப் புணரத் தண்ணளி நிறைந்த ஆருயிர் உறவே, நின்திருவடியினை அடியேன் நீங்கா வண்ணம், எளியேன் மனமெனுங் கருவி, அது செல்வம் உலகின் வழியினை அறுத்து அடியேன்பால் திருவடிக்கு நேர்வழியாம் நன்னெறி நாற்படியில், செல்லுதற்குத் துணையாக அம்மனம் என் வழிச்செல்லுமாறு தேவரீரின் தண்ணருள் வரமது வேண்டும். "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையா தொருபோதுமிருந்தறியேன்" என்னும் தனித்தமிழ் மாமறையின்கண் ஓதியவாறு உன் நினைவாக இருந்து நலமுறத் திருவருள் புரிதல் வேண்டும்.

(40)