பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

413
நாடி யேஇந்த உலகத்தை மெய்யென நம்பித்
தேடி னேன்வெறுந் தீமையே என்னினிச் செய்வேன்.
    (பொ - ள்.) (முழு முதல்வனின் திருவடிப் பேரின்ப முழுவதும் தம்மதாகக்கொண்டு அழுந்தியறியுமா மெய்யடியார்கள் அவ்வின்ப மேலீட்டால் பாடியாடுவர், ஆடிநின்றழுவர்; நின் திருவடித் தாமரையினைத் தம் முடியின்மேல் சூடிப் பெருவாழ்வு வாழ்ந்தனர். அத்தகையார் நின்னடியார் என்று நிலவுகின்றனர். தொண்டனாகிய யான் இவ்வுலகத்தை நிலையான மெய்ப்பொருளென்று முற்றாக நம்பி அளவில்லாத பாவங்களையே தேடினேன்; இனிமேல் எளியேன் என் செய்வேன்? (நின் திருவருளால் அடி யன் உய்தல் வேண்டும் என்பதாம்.) மெய்யடியார்களின் இயற் பண்பு வருமாறு :

"பாட வேண்டுநான் போற்றி நின்னையே
    பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
 காட வேண்டுநான் போற்றி அம்பலத்
    தாடு நின்கழற் போது நாயினேன்
 கூட வேண்டுநான் போற்றி யிப்புழுக்
    கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
 வீட வேண்டுநான் போற்றி வீடுதந்
    தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே."
- 8. திருச்சதகம், 400.
(18)
களவு வஞ்சனை காமமென் றிவையெலாங் காட்டும்
அளவு மாயைஇங் காரெனக் கமைத்தனர் ஐயா
உளவி லேஎனக் குள்ளவா றுணர்த்திஉன் அடிமை
வளரும் மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன்.
    (பொ - ள்.) பிறர்பொருளை அவர் அறியா நிலையில் எடுத்துத் தமதாக்கிக் கொள்ளும் களவும், நன்மைபோற் காட்டித் தீமை புரியும் இரண்டகமாகிய வஞ்சனையும், நிலையிலாப் பொருள்களின்மேல் பற்றுக் கொள்ளும் ஆசையும் மாயைத் தொடக்கினால் வருவன. இவற்றை அடியேனுக்கு இங்கு அமைத்து வைத்தவர் யாவர்? முழு முதல்வனே! மறைவாக இவ்வுண்மையினை அடியேனுக்கு நின் திருவருள் உணர்த்துமாயின் அடியேன் அறிவு தளர்வின்றி வளரும் பெரிய மதியினைப் போல் நின்னடிக் கீழ்க் குடியாக வாழ்வேன். அடிக்கீழ் வாழ்தல் - மறவா நினைவுடன் அடியார்க்குறவாய் வாழ்தல்.

(19)
வான நாயக வானவர் நாயக வளங்கூர்
ஞான நாயக நான்மறை நாயக நலஞ்சேர்
மோன நாயக நின்னடிக் கன்பின்றி முற்றுந்
தீன னாய்அகம் வாடவோ என்செய்வேன் செப்பாய்.