ஆணையிட்டுச் சொல்லுகின்றேன். மூன்று திருக்கண்களையுடைய பேரருட் பெருமானின் தண்ணளியினால் அடியேன் பெற்றுள்ள மௌனத்தினால் சிவபெருமானின் திருவடிப் பெரும்பேறு எளிதிற் கைகூடும்; கைகூடவே கிடையாத நன்மை ஏதும் இல்லை; எல்லா நன்மைகளும் நமக்குளவாகும்.
(வி - ம்.) மன முதலியன அடங்கினர்க்கு மன்னுசிவன் முன்னிற்கு முண்மை வருமாறு :
| "அன்றிவரும் ஐம்புலனும் நீயும் அசையாதே |
| நின்றபடி யேநிற்க முன்னிற்கும் - சென்று |
| கருதுவதன் முன்னம் கருத்தழியப் பாயும் |
| ஒருமகள்தன் கேள்வன் உனக்கு." |
| - திருக்களிற்றுப்படியார், 35. |
(13)
நானென் றொருமுத லுண்டென்ற நான்தலை நாணஎன்னுள் | தானென் றொருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில் | ஆனந்தந் தந்தென் அறிவையெல் லாமுண் டவசநல்கி | மோனந் தனைவிளைத் தால்இனி யாதுமொழிகுவதே. |
(பொ - ள்.) (சிறுவன் ஒருவன் மாணவன் ஆகுமுன் தன்முனைப்பாய் அடங்காது திரிவதும், மாணவனாயதும் தன்முனைப்பும் தன்வயமும் நீங்கி ஆசானுக்கு அடிமையாய் அவன்வயப்பட்டு ஒழுகுவதும் போன்று, உண்மையறிவு திருவருளால் அடியேனுக்குத் தோன்றுவதன் முன்) நான் என்று பிறிதொருவர் பெருந்துணை உண்டு என எண்ணாது மிகவும் தருக்கித்திரிந்தேன்; (அங்ஙனந் திரிந்த யான் நாணித் தலைவணங்கும்படி உயிர்க்குயிராய்) அடியேன் உள்ளத்து ஒரு முதல்முழு நிறைவாய்த் திருவருளால் உண்டென்று தலைப்பட்டு ஒப்பில்லாத பேரின்பப் பெருக்கினைத் தந்தருளி எளியேன் அறிவு முழுவதையும், தன்னறிவினுள் அகப்படுத்து ஏழையேனையும் அடிமையாக்கி மேலான நிலையில் விளைத்தருளுவதானால், அடியேன் இனி மொழிகுவதற்கு யாதுளது? (ஏதும் இன்றென்பதாம்)
(வி - ம்.) ஆண்டான் வலிய ஆட்கொண்டருளுமுண்மை மாணிக்குத் தன் முனைப்பு மற்றகன்றாம் மெய்யடிமை, காணின்முன் பின் ஆசான் கழல் என்பதன்கண் மாணவன் கல்வி வேட்கை ஒன்றேயுடையன்; அறியாமை நீங்கிய அறிவுடையனல்லன், அந்நிலை ஆசான் ஆண்டருளிய பின்னரே அமைவதாகும். அதுபோல் ஆண்டான்பால் வேட்கை எழலும் அவன் ஆண்டருள்வன் அவ்வுண்மை வருமாறு : மாணி - மாணாக்கன்.
| "அறிவ னேயமு தேயடி நாயினேன் |
| அறிவ னாகக்கொண் டோவெனை யாண்டது |
| அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் |
| அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே." |
| - 8. திருச்சதகம், 50. |
(14)