கல்லாலின்கண் வீற்றிருந்தளும் முழுமுதல்வதற்கு அன்பு இடையறாது வைக்குங் காலமுண்டாகத் தவம் புரியாத் தன்மை யாது?
(35)
சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம் | அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே | பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால் | வெம்மாயக் காட்டில் அலைந்தேன்அந் தோஎன் விதிவசமே. |
(பொ - ள்.) அம்மா வாய் பேசாது மனம் சிவனென்றிருந்து கொண்டிருப்பதாகிய சும்மாவிருத்தலே நீங்கா இன்பு ஓங்குதற்குக் காரணம்; அதனையே மறைகளனைத்தும் எக்காலமும் சொல்லிவரவும், எளியேனை ஆண்டுகொண்டருளிய பெருமானாகிய மௌனகுருவும் அங்ஙனமே செயவியறிவுறுத்தலாகிய உபதேசஞ் செய்தருளவும் இவற்றையெல்லாம் தவறவிட்டு அடியேனின் அறிவின்மையால் கொடிதாகிய இம் மாயக்காட்டில் அலைந்து வருந்தினேன்; ஐயோ! இந்நிலை எளியேனின் ஊழ்முறையேயாகும்!
(36)
தினமே செலச்செல வாழ்நாளும் நீங்கச் செகத்திருள்சொப் | பனமே யெனவெளி கண்டே யிருக்கவும் பாசபந்த | இனமே துணையென் நிருந்தோம் நமன்வரின் ஏன்செய்குவோம் | மனமே நம்போல வுண்டோசுத்த மூடரிவ் வையகத்தே. |
(பொ - ள்.) ஒவ்வொருநாளும் பயனின்றிக்கழியக்கழிய நம்முடைய வாழ்நாளகிய அகவையும் கழிந்துகொண்டே போகின்றது, மாயாகாரிய உலக மயக்கமாகிய இருள் கனவுபோற் கழியு நிலையினை வெளிப்படையாகக் கண்டிருந்தும், பாசக்கட்டுகளாகிய உறவு முதலியவற்றை உறுதியான துணையென்றிருந்தோம்; முடிவில் நமன் வந்த காலத்து யாது செய்குவோம்; மனமே! நம்மைப்போன்றுண்டோ முழுமூடர் இவ்வுலகத்தே?
(37)
கடலெத் தனைமலை எத்தனை அத்தனை கன்மமதற் | குடலெத் தனையத் தனைகடல் நுண்மணல் ஒக்குமிந்தச் | சடலத்தை நான்விடு முன்னே யுனைவந்து சாரஇருட் | படலத்தை மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே. |
(பொ - ள்.) எங்கும் நீங்குதலில்லாத பெரும்பரப்பாய் நிற்கும் தனிமுதலே! கடல்கள் எத்துணை, மலைகள் எத்துணை அத்துணை மிகுதியுடையன அடியேன் இருவினைகள்; அவ் விருவினைகட்கு ஈடாக வந்து பொருந்தும் உடல்கள் எத்துணை அத்துணைக்கும் ஒப்புக் கடலினுள் காணப்படும் நுண்ணிய மணல்களாகும் அடியேன் இவ்வுடலமாகிய சடலத்தை விடுவதன்முன் உன் திருவடியினை வந்து பொருந்துதற்குத் தடையாகவுள்ள இருட்படலத்தை மாற்றியருளுதல் கூடாதோ?
(38)