பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

454
அவர்பால் விட்டு நீங்காது ஒட்டிச் செல்லுவது இறவாப்பேரின்பமேயாம். இங்ஙனமன்றி மறை வேறொன்றாக அறையுமோ? (அறையா தென்க.)

(14)
கல்லேறுஞ் சில்லேறுங் கட்டியே றும்போலச்
சொல்லேறப் பாழ்த்த துளைச்செவிகொண் - டல்லேறு
நெஞ்சனென நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே
வஞ்சனல்லேன் நீயே மதி.
     (பொ - ள்.) முக்கூற்றுப் புறச்சமயத்தவர்களும் முன்னொடுபின் முரணாகச் சொல்லும் சொற்கள் முறையே கல்லெறிதலையும், ஒட்டாஞ் சில்லி எறிதலையும், மண்ணாங்கட்டி எறிதலையும் ஒத்த பயனில்லாத பிறவித்துன்பத்துக்கு ஏதுவாகிய சொற்களைக் கேட்டுப் பொழுதினைப் பாழாக்குவதற்கு வாய்த்த தொளையுடைய செவியினைக்கொண்டு இருள் மிகும்படியான நெஞ்சினையுடையேன் யான்என நிற்கவைத்தருளினை; தனிமுதற்பொருளே அடியேன் வஞ்சனையுடையேனல்லேன்; இதனை நீயே மதித்தருள்வாயாக.

     (வி - ம்.) அடியேன் செம்பொருட்டுணிவின் சீரிய மெய்ப்புணர்ப்பெனப்படும் சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவ சமயத்தினரின் அரும்பெருங்கொள்கைகளை இதுகாறும் கேட்கும் வாய்ப்புப் பெற்றிலேன்; அது நின் திருவருள் மறைப்பில்லாமல் நிகழாது. ஆதலால் தேவரீர் அதனை எண்ணியருளுதல் வேண்டும் என்பதாம்.

(15)
அப்பொருளும் ஆன்மாவும் ஆரணநூல் சொன்னபடி
தப்பில்லாச் சித்தொன்றாஞ் சாதியினால் - எப்படியுங்
தேரில் துவிதஞ் சிவாகமமே சொல்லுநிட்டை
ஆருமிடத் தத்துவித மாம்.
     (பொ - ள்.) திருவருள் கைவரப்பட்ட நால்வர் முதலியோர் வாயிலாகத் திருவருள் வெளிப்படுத்தியருளும் மெய்ம்மொழிகள் மறை எனப்படும்; அம் மறை அறுதியிட்டுக்கூறுவது விழுமிய முழு முதல்வனான அம் மெய்ப்பொருள் பேரறிவுடையதென்றும், அவ்வறிவின் தண்ணளியால் விளக்க விளங்கும் அறிவுடைய ஆருயிர் சிற்றறிவுடையதென்றும், இருவகைத்தாம்; அறிவினம் என்னும் முறையில் இரண்டும் ஒன்றாயினும். (நிலைமையில் ஆசானும் மாணவரும் போன்றும் முதன்மையும் அடிமையும் போன்றும் காணப்படும்.) 1 கட்டு நிலையில் பிரிந்துள்ள இரண்டு பொருள்போன்றே காணப்படும்; திருமாமுறையாகிய சிவாகமம் ஓது முறைப்படி திருவருளால் நிட்டை கைகூடிய இடத்து இரண்டும் பெருவிரலும் சுட்டுவிரலும் வேறுநின்ற நிலை நீங்கி இரண்டும் முறையே வணங்குவிக்க வணங்கியும், வணங்கிப் புணர்ந்த நிலையில் அவ்விரண்டும் அழியாமலும் வேறுநில்லாமலும் இரண்டற்ற ஒன்றேயாம். இதுவே மெய்ப்புணர்ப்பின் உண்மை நிலை.

 1. 
'சிவன்சீவன்'. சிவஞானசித்தியார், 11. 24.