(பொ - ள்.) (செம்பொருட்டுணிவாம் மெய்ப்புணர்ப்புடைய நல்லார் சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவர் எனப்படுவர். இவரே நன்னெறியினர். இவர்களே மோனங் கைவரப் பெற்றவர்.) நினைக்கும் மனத்தினாலும் மாற்றமாகிய சொல்லினாலும் அளவுபடுத்த முடியாத தொன்றே மோன நிலை எனப்படும்; அவற்றான் நிலைபெற முடியாத திருவருளால் நிலை பெறுத்தக் கூடிய மோனநிலை கைவரப்பெற்ற திருக்கூட்டத்தாரே நல்லினத்து நல்லாராவார். மிக்க புகழ்பெற்றவரும் அவரே; சொல்லமுடியாத வீடுபேற்றுப் பேரின்ப நுகர்வினரும் அவரே. கொண்டவர் - பெற்றவர். கண்டவர் - நுகர்பவர்.
(20)
கண்ணொளியே மோனக் கரும்பே கவலையறப் | பண்ணொளிக்கும் உள்ளொளியாம் பான்மையினை - நண்ணிடவுன் | சித்த மிரங்கிலதென் சித்தந் தெளியாவே | றித்தனைக்கும் ஆதரவும் இல். |
(பொ - ள்.) பெற்றவர்கள் பிள்ளைகளைப் பேணுமாறும் மாணவர்களை ஆசானும், நோயாளிகளை மருத்துவனும் அவரவர்கட்கு வேண்டுவன முன்னறிந்து அமைத்திருப்பதுமல்லாமல் அவ்வப்போதும் ஆசான் மருத்துவரும் அண்டினர்க்கு வேண்டுவன, பேசா தியற்றலவர் பெட்பு என நினைந்து கடமையுணர்ந்து தாமே முன்வந்து செய்வது போன்றுந் திருவருளும் செய்தல் வேண்டுமென எண்ணுதல் சொல்லாமே விளங்கும். கண்ணுண்மணியாம் பேரொளியே, மோனத்தில் விளைந்து முதிர்ந்து விளங்கும் கரும்பே, உள்ளத்தில் தோன்றி உருக்குலையச் செய்யும் கவலையறச் செய்கின்ற உள்ளே விளங்குகின்ற ஒளியாகும் தன்மையினை எய்தி யின்புற, தேவரீருடைய உள்ளமானது கழிவிரக்கங் கொள்ளாதது என்னையோ? அடியேன் உள்ளம் தெளியா திருக்கின்ற இவ்வளவுக்கும் பற்றுக்கோடாக நிற்பதும் நின் திருவடியேயன்றி வேறில்லையே? (திருவருளே இரங்குதல் வேண்டும்.)
(21)
அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் | நெறியான போததுவாய் நிற்குங் - குறியால் | சதசத் தருளுணர்த்தத் தானுணரா நின்ற | விதமுற் றறிவெனும்பேர் மெய். |
(பொ - ள்.) ஆருயிர் அறியாமையைச் சாரின் அதன் நிலைமையால் அதனுள்ளடங்கி அதுவாய் அறியாமையே ஆகியும், அறிவுவண்ணமாம் நன்னெறியினைச் சார்ந்தபோது அவ்வறிவினுள் அடங்கி அதுவாய் அறிவேயாகியும் நிற்கும் தன்மையினால் நிலை நிலையாமையாகிய மெய்பொய் யெனப்படும் சத்து அசத்தென்று திருவருளுணர்த்த 1 அவ்வுயிர் உணரும் திறம்பெற்று அதற்கு அறிவென்னும் பெயர் மெய்ம்மையாகும். சத்து + அசத்து = சதசத்து.
இவ்வுண்மை வருமாறு :
| "சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று |
| நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டன் பாலும் |
1. | 'அறிவிக்க.' சிவஞானசித்தியார், 7. 3 - 2. |