பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

459
போலுந் திருமுடியினையுடையவன்; மூன்று திருக்கண்களையுடையவன். அவன் திருவடிகண் அடைக்கலம் புகுந்து அடிமையானவர்கட்குத் திருவருளால் முடியாத காரியம் என்ன உளது? எல்லாம் இனிதாக முடியும் என்பதாம்.

(24)
சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை நாமெனவே
அல்லும் பகலும் அரற்றுவதென் - நல்லசிவ
ஞானமயம் பெற்றோர்கள் நாமில்லை என்பர்அந்தோ
மோனமய மான முறை.
     (பொ - ள்.) சொல்லாகிய மாற்றமும் (இனம்பற்றி எண்ணுவதாகிய மனமும்) எட்டவொண்ணாது கடந்து நிற்கின்ற பேரின்பப் பெரும்பொருளை (மாயாவாதக்கொள்கையினர்) இரவும் பகலும் ஓயாது நாமென்று அரற்றிக்கொண்டிருப்பதால் ஆம் பயன் யாது? நன்மை மிக்க சிவ மெய்யுணர்வு பெற்றவர்கள் திருவருளால் நாம் சிவனுக்கு அடிமையாகி விட்டமையால், முன்போல் முனைத்து நாமொரு முதலென்று சொல்லநாணுவர். நாமும் முதல்வனுக்கு வேறாகவும் இல்லை ஐயோ! இதுவே மௌனமயமான முறைமையாம்.

     (வி - ம்.) ஆசானுக்கு அடங்கிக் கற்று இன்புறு மாணவன் தன்னை ஆசானைச் சாராதிருந்த முன்னைய வேறான நிலைபோன்று எண்ணுவனோ? அல்லது ஆசானைச் சார்ந்துவிட்டமையால் தன்னை ஆசானென்று எண்ணுவனோ? கூறுமின்! இவ்விரண்டுமின்றித் தன்னை அவ்வாசானுக்கு அடிமைப்பட்ட மாணவனென்றே எண்ணுவன். இது போன்றதே ஆருயிர்கள் திருவடியைச் சார்ந்தவிடத்தும் சிவனுக்கு அடிமையேயாம். "நான் பிரமம்" 1 என எண்ணும் சிவஞானம் கைவராத்தன்மையேயாம்.

(25)
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார் - வையகத்தோர்
சாற்றரிதென் றேசற்றார் தன்னனையாய் முக்கண்எந்தை
நாற்றிசைக்கும் கைகாட்டி னான்.
     (பொ - ள்.) ஐயனே! அருணகிரி அப்பனே! உன்னைப்போல் உண்மையாகச் சிவனே என்றிரு என ஒப்பில் ஒரு மாமறை மொழியினை உலகினுக்குச் செவியறிவுறுத்தியவர் வேறு எவர் உளர்? (ஒருவரும் இலர் என்பதாம்.) நிலவுலகத்தோர் அம் மெய்ம்மையினைக் கூறமுடியாதென்றனர். மூன்று திருக்கண்களையுடைய எந்தையும் கல்லாலடியில் வீற்றிருந்தருளிச் சிவமெய்ப்புணர்ப்பாம் சீர்மையின் அறிவடையாளத்திருக்கையால் நாற்றிசைக்கும் ஓதாதுணர்த்தியருளினன்.

     (வி - ம்.) பற்றற்றான் பற்றினைப் பற்றுதல் வேண்டத்தக்கதும் வினைப்பற்றுக்கள் அற்றுவிட வாயிலாவதும் போன்று இருப்பதுமாகும்.

 1. 
'வேதசாத்திரமிகுதி.' சிவஞானசித்தியார், 9 - 1 - 1. " 'எவ்விடத்தும்.' " 11. 1 - 1