பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

461
அடியேன். அங்ஙனமாயினும், எளியேன் உள்ளத்திலும் அவன் வீற்றிருந்தருளவில்லையெனின் அவன் யாண்டும் பரந்து செறிந்து நிறைந்து நின்றருளும் மாறா மெய்ம்மைப் பண்பினுக்கு இழுக்குண்டாகும். (எனவே) அங்ஙனம் இல்லனென்று கூறவும் முறைமையுண்டாகி விடும்.

     (வி - ம்.) ஆருயிர்கட்குச் செவ்வி வரும்வரை நடப்பாற்றலாகிய திரோதானசத்தி சிவனைக்காட்டாது மறைத்து உலகத்தைக் காட்டிக் கொண்டு நிற்கும். செவ்வி வந்ததும் அஃது வனப்பாற்றலாகிய மலைமகளாகத் திகழ்ந்து சிவனைக் காட்டும். மலைமகள் - திருவருட்சத்தி.

(28)
தத்துவப்பே யோடே தலையடித்துக் கொள்ளாமல்
வைத்த அருள்மோன வள்ளலையே - நித்தம்அன்பு
பூணக் கருதுநெஞ்சு போற்றக் கரமெழும்பும்
காணத் துடிக்குமிரு கண்.
     (பொ - ள்.) மெய்கள் எனப்படும் முதன்மைத் தத்துவங்கள் முப்பத்தாறும், அவற்றின்கட்டோன்றும் மெய்யாக்கம் அறுபதும் ஆகத் தொண்ணூற்றாறும் பேய்போற் பிடித்து ஆருயிர்களை ஆட்டுவன; அவற்றுடன் தலையடித்துக்கொண்டு துன்புறாமல் நன்னிலைக் கண் நிறுத்தியருளிய பெருவள்ளலாராகிய மோனகுருவின் திருவடிக்குப் பேரன்பு வைக்கும்படி நன்னெஞ்சே 1 நாடுவாயாக; கையை உச்சியின்மேற் குவித்துத் தலைவணங்கித் தொழுவாயாக; நாடோறும் காணும் பொருட்டுக் கண்கள் துடித்துக்கொண்டு முன்னிற்கும்.

(29)
தொல்லைவினைக் கீடாய்ச் சுழல்கின்ற நானொருவன்
எல்லையிலா நின்கருணை எய்துவனோ - வல்லவனாம்
மோன குருவே முழுதினையுந் தானுணர்ந்த
ஞான குருவே நவில்.
     (பொ - ள்.) பண்டைவினைக்கீடாகப் பிறந்திறந்துழலும் சுழற்சியுட் பட்டுழல்கின்ற அடியேன், அளவில்லாத நின் பேரருளைப் பெற்றுய்வனோ? எல்லாம் வல்ல மோனகுருவே! இயல்பாகவே முற்றுமுணர்ந்த அருள் மூதறிவுக்குருவே, திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(30)
மூன்றுகண்ணா முத்தொழிலா மும்முதலா மூவுலகுந்
தோன்றக் கருணைபொழி தோன்றலே - ஈன்றஅன்னை
தன்னைப்போல் அன்பு தழைத்தோய் ஒருதெய்வம்
உன்னைப்போ லுண்டோ வுரை.
     (பொ - ள்.) அன்பறிவாற்ற லென்னும் மூன்று திருக்கண்களையுடையவனே, படைப்பு, காப்பு, துடைப்பு என்னும் உடலின்கண்

 1.