(பொ - ள்.) நெஞ்சமே! மோனகுரு திருவாய்மலர்ந்தருளிய ஒப்பற்ற சிவ என்னும் ஒரு சொல்லால், கொடையும் நற்றவமும், மெய்யுணர்வும், சொல்லுதற் கொண்ணாத பேறுகளும்1 திருவடிப் பேறும் தாமே எளிதாகவும் இனிமையாகவும் வந்தெய்தும். அதனால் நல்லின்பத்துடனிருப்பாயாக; இன்னமும் உனக்கு மயக்க முண்டாவது எதன் பொருட்டு?
(70)
உன்னை உடலை உறுபொருளைத் தாஎனவே | என்னை அடிமைக் கிருத்தினான் - சொன்னஒரு | சொல்லை மறவாமல் தோய்ந்தால்நெஞ் சேஉன்னால் | இல்லை பிறப்பதெனக் கே. |
(பொ - ள்.) நெஞ்சமே! அடியேனுடைய ஆவியும் உடலும் உடைமையும் முன்னே பெற்றுக்கொண்டு எளியேனை மீளா அடிமையில் இருத்தியருளினன். அவன் திருவாய்மலர்ந்தருளிய ஒப்பில்லா ஒரு மொழியை மறவாமல் ஒல்லும்வகை ஓவாது உள்கி வருவாயானால் உன்னால் அடியேனுக்குப் பிறவாமை வந்து கைகூடும். ஆசான் ஆவி, உடல், உடைமை மூன்றனையும் முன்னே பெற்றுக் கொள்ளுதல் எய்தியபின் வீட்டிற் குடியிருப்பர் மூன்றும் பெற்றெய்து வித்தான் தன்னடிமை இன்பு என்பதாகும்.
(71)
உள்குதல் - தியானித்தல்.
எனக்கும் உனக்கும்உற வில்லையெனத் தேர்ந்து | நினைக்கஅரி தானஇன்ப நிட்டை - தனைக்கொடுத்தே | ஆசான் மவுனி அளித்தான்நெஞ் சேஉனையோர் | காசா மதியேன்நான் காண். |
(பொ - ள்.) நெஞ்சமே! சுட்டுப் பொருளாய் அறிவில்லதாய்க் காணப்படும் உனக்கும், சுட்டிறந்த நிறைவாய் அறிவுப் பொருளாய் உள்ள எனக்கும் எவ்வகைத் தொடர்பும் எஞ்ஞான்று மில்லை என ஆசானருளால் தெளிந்து நினைப்பதற்கும் அருமையாகிய பேரின்பப் பெரு நிட்டையினை எளியேனுக்குக் கொடுத்தருளி மௌனகுரு அடியேனை ஆட்கொண்டருளினன்; இனிமேல் உன்னை ஒரு காசுக்கும் யான் மதியேன்.
(72)
ஆனந்த மோனகுரு வாமெனவே என்னறிவின் | மோனந் தனக்கிசைய முற்றியதால் - தேனுந்து | சொல்லெல்லாம் மோனந் தொழிலாதி யும்மோனம் | எல்லாம்நல் மோனவடி வே. |
(பொ - ள்.) பேரின்ப வடிவாம் மௌனகுரு தண்ணளியால் எழுந்தருளிவந்து அடியேனை ஆண்டுகொண்டு என்பால் பேச்சற்ற நிலையுண்டாகும்படி அருளினன். அப்பொழுதே அடியேன் அறிவின் கண் அம் மோனம் தன்னியல்புக்கு உரித்தாகும் வண்ணம் நிறைந்தது;
1. | 'மந்திரத்தான்'. சிவஞானசித்தியார், 12. 3 - 4. |