இனிமேல் அஞ்சாதிருப்பாயாக என்று இரக்கங் கொள்கின்ற பேரின்பப் பெருங்கடலில், என்னைப் போன்று நீயும் மூழ்கிப் பேரின்பமுற வாராயோ?
(4)
வாரா வரவாய் வடநிழற்கீழ் வீற்றிருந்த | பூராயம் நம்மைப் புலப்படுத்த வேண்டியன்றோ | ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து | பாராயோ அவ்வுருவைப் பார்க்கநிறை வாய்விடுமே. |
(பொ - ள்.) கிடைத்தற்கரிய பேரருள் வரவாய் எழுந்தருளி வந்து முற்றுணர்வின் திருவடையாளமாம் திருவெள்ளிமலைமீது ஆலமரத்தடியில் வீற்றிருந்தருளியது வரலாற்று முறையால் நம் உண்மையினைப் புலப்படுத்தல் வேண்டியன்றோ? நெஞ்சமே இதனை நீ ஓர்ந்துபார்ப்பாயாக. ஓர்ந்து உருகுதல் செய்யாயோ? அகவுணர்வொடு பொருந்தியிருந்து அத் திருவுருவினைப் பார்த்தல் செய்யாயோ? திருவருளால் அத் திருவுருவினைப் பார்க்கும்போது நம்பால் பேரின்பப் பெருவெள்ளம் முற்றாக நிறைந்துவிடும்.
(5)
பூராயம் - வரலாறு.
வாயாதோ இன்பவெள்ளம் வந்துன் வழியாகப் | பாயாதோ நானும் பயிராய்ப் பிழையேனோ | ஓயாமல் உன்னி உருகுநெஞ்சே அந்நிலைக்கே | தாயான மோனனருள் சந்திக்க வந்திடுமே. |
(பொ - ள்.) மனமே, பேரின்பப்பெருவெள்ளம் உன் வழியாக வந்து என்னறிவின்கண் பாயாதோ? அடியேனும் அன்புப் பயிராகப் பிழைத்து வளர்ந்து இறைவா இன்பச் சிறப்பு எய்தல் செய் துய்யேனோ? ஒல்லும்வகை ஒவாது உள்கி உருகுவாயாக. அவ் வுருக்கத்தால் மோனகுரு நம்மை ஆண்டருளவந்து நேர்படுவர்.
(6)
வந்த வரவை மறந்துலகாய் வாழ்ந்துகன்ம | பந்தமுற உன்னைப் படிப்பிக்கக் கற்றவர்யார் | இந்தமதி ஏன்உனக்கிங் கென்மதிகேள் என்னாலே | சந்ததநெஞ் சேபரத்திற் சாரின்இன்பம் உண்டாமே. |
(பொ - ள்.) மனமே, நாம் ஏன் இந்நிலவுலகத்தில் திருவருளால் பிறப்பிக்கப்பட்டோம் என்பதை அறவே மறந்து, இவ்வுலக மயக்கில் ஈடுபட்டு ஆணவ முனைப்பால் இருவினைகளைப் புரிந்து மீண்டும் மீண்டும் பிறக்கும்படியான கட்டிற் சிக்கும்படி உனக்குக் கற்பித்தவர் யார்? இத்தகைய பொருந்தாத புல்லறிவேன்? இனி மேல் யான் கூறும் மதியினைக் கேட்பாயாக : என் வாயிலாக என்றும் பொன்றாத தனிப் பெரும் முதல்வன் திருவடியில் நிலைத்த புகலென அடைந்தாயாயின் இறவாத இன்பப் பேறுண்டாகும்.
(7)