புகலிலா ஒருவன் வீணாய்க் கழிந்தொழியாவாறு திருமுகம் பார்த்து இரங்கியருள்வாயாக; மேலாம் தனிப்பெரும் முதலே!
(3)
உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்ற | கள்ளக் கருணையையான் காணுந் தரமாமோ | வெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும் | பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் பராபரமே. |
(பொ - ள்.) அடியேன் உள்ளத்தின் உள்ளே செவ்விவரும் பொருட்டு "ஒளிக்குஞ் சோரனாய்"த் தோன்றாத்துணையாக நின்று இருவினைக்கீடாக எளியேனை ஆட்டுவித்தருள்கின்ற வஞ்சத் தண்ணளியாங் கருணையினை அடியேன் கண்டு கைக்கொள்ளும் தகுதியுண்டோ? செந்நெறிக்கு அயலாய்ச் சிவனை மறந்த தீநரகாளர், பொல்லாக் கொலையின் காரியமாயும் மீட்டுங் கொலைக்குக் காரணமாயும் காணப்படும் புன் புலால் உண்ணும் புலைவேட்கையர், மீன்கள் அனைத்தையும் ஒருங்கு கொன்றுண்ணும் கோட்பாட்டினால் பள்ளத்தில் தங்கியுள்ள நீரைச் சிறிது வடியச் செய்து எஞ்சிய நீரில் நஞ்சினையூட்டுவர். அக்காலத்து அம் மீன்கள் உய்யும் வழியின்றி எங்ஙனம் துடிக்குமோ? அங்ஙனம் அடியேன் துடிக்கின்றேன்; மேலாம் தனிப்பெருமுதலே!
(4)
வாவிக் கமலமலர் வண்டாய்த் துவண்டுதுவண் | டாவிக்குள் நின்றவுனக் கன்புவைத்தார்க் கஞ்சலென்பாய் | பூவிற்கும் வான்கடையிற் புல்விற்போர் போலஒன்றைப் | பாவிக்க மாட்டேன் பதியே பராபரமே. |
(பொ - ள்.) பெரிய நீர்நிலையாகிய வாவியிலுள்ள தாமரை மலரில் காணப்படும் வண்டை யொத்து வாடிவாடி உயிர்க்குயிராய்த் தோன்றாத்துணையாக நின்றருளும் நின் திருவடிக்கு அன்புவைத்துள்ள மெய்த்தொண்டர்கட்கு அஞ்சேலென்று அருள்புரிவாய். நறுமண மலர்கள் நாளும் விற்கும் சிறந்த பூக்கடையில், புல்லை விற்பாரும் உளராவரோ? (ஆகார் அதனால்) உன்னையன்றிக் கனவினும் பிறிதொரு தெய்வத்தைக் கருதேன். (நினைக்கமாட்டேன்.) முதல்வனே! மேலாம் தனிமுதற்பொருளே!
(5)
விண்ணாறு வெற்பின் விழுந்தாங் கெனமார்பில் | கண்ணாறு பாய்ச்சிடுமென் காதல்வெள்ளங் கண்டிலையோ | தண்ணாறு சாந்தபதத் தற்பரமே நால்வேதப் | பண்ணாறும் இன்பப் பதியே பராபரமே. |
(பொ - ள்.) வான்புனலாகிய ஆகாயகங்கை விண்ணாறு எனப்படும். அது மலைமுகட்டில் விழுந்து வழிவதை யொத்து அடியேன் மார்பினில் (நின்னைக் காண்டல் வேண்டுமென்னும் வேட்கையால்) கண்களினின்றும் ஆறுபோற் பாயும் காதல் வெள்ளப் பெருக்கைக் கண்டிலையோ? குளிர்ச்சி மிகுகின்ற அமைதி திகழ்கின்ற மேலாம்