பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

499

வேதமுத லானநல் லாகமத் தன்மையை
    விளக்கும்உள் கண்இலார்க்கு
  மிக்கநின் மகிமையைக் கேளாத செவிடர்க்கும்
    வீறுவா தம்புகலுவாய்
வாதநோ யாளர்க்கும் எட்டாத முக்கணுடை
    மாமருந் துக்கமிர்தமே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண் உமையே.
     (பொ - ள்.) அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கினையும் தொகுத்தும், வகுத்தும், விரித்துங்கூறும் வாழ்க்கை நூலாகிய வேத முதலிய மறைநூல்களின் தன்மையையும் வழிபாட்டு நூலாகிய இறைநூ லெனப்படும் ஆகமங்களின் தன்மைகளையும், அருளாசான் வாயிலாக விளக்கிக்காட்டுகின்ற அகக்கண் ணில்லாதார்க்கு, யாவர்க்கும் மேலாம் முழுமுதன்மை வாய்ந்த நின் திருவடிப் பெருமையின் சிறப்பினைக் கேட்கும் பேறில்லாத செவிடர்க்கும், அளவினமை யாது வரம்பழித்துச் சொற்போரிடும் வாய்வழிச் சழக்குரைக்கும் வாய்ப் போர் வல்லார்க்கும் காணக் கருதக் கேட்கவும் எட்டாத அன்பு அறிவு ஆற்றல்களாகிய மூன்று திருக்கண்களையுடைய அறிவு நிலையாம் பேரமிழ்தனைய சிவபெருமானுக்கு ஆற்றல் நிலையாம் அமிழ்தமாக இருந்தருள்பவளே!

     மலையரசன்பால் திருவருள் தோற்றம் வைத்தருளி இருகண்மணி யனையளாய்த் தோன்றிய வளர்காதலிப் பெண் உமையே! நிலமுதலாகச் சொல்லப்படும் ஐம்பூதந் தொட்டு ஓசை மெய்யாம் நாததத்துவம் முடியவும் (மாயாகாரியப் பொருள்களெனவும், தோற்ற வொடுக்கங்களையுடைய) நிலையில்லாதன வென்னும் நீடிய மெய்ம்மையினைத் திருவருளால் அடியேனுக்குக் காட்டி எளியேனுடைய சிற்றறிவினை உள் நின்று செலுத்தும் உண்மையால் நடுவாகி, முதலும் முடிவுமில்லாத பேரறிவு நிறைந்த திருவருள் வெளிக்குள் அவ்வருள் நினைவேயன்றிப் பிறிது எந்நினைவும் இல்லாத நிலையில் நில்லென்று, வழித்துணையாக வைத்து, தூயநினைவுகள் அனைத்தையும் கைகூடச் செய்தருளவல்ல, மூதறிவாய பேரின்பப் பெருவடிவினைத் தந்தருளிய ஒப்பில்லாத அன்னையே, நின்திருவடிகளை எளியேன் மறந்து உய்வனோ? (உய்யேன் என்பதாம்.)

     (வி - ம்.) பொய் - நிலையில்லாதது; தோற்ற ஒடுக்கங்களை யுடையது. போதம் - சிற்றறீவு. உபாயம் - வழித்துணை. சித்து - அறிவு. மாமருந்து - அமிழ்து. முக்கண் - மூன்று திருக்கண். அன்பு - இச்சை. அறிவு - ஞானம். ஆற்றல் - தொழில். "உலகியல் வேதநூல் ஒழுக்கம்" என்னும் உண்மையால் தேவர் திருக்குறள் செந்தமிழ் மறையாகும். வழிபாட்டு நூல் ஆகமம் எனப்படுதலால்" மூவர் தமிழும், முனிமொழியுங் கோவை திருவாசகமும், திருமூலர் சொல்லும்" செந்தமிழ் ஆகமமாகும். ஆகமம் - திருமுறை. முனி - மாணிக்கவாசகர்.

(3)