பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

531

    (பொ - ள்.) வஞ்சனையையும் பொய்யினையும் மனம் முழுவதும் நிறையவைத்து, அதன் மேலும், பொல்லாப் பொறாமையும் தடுமாற்றமும் உடையனாகிய அடியேனுக்கு நன்னெறி கைகூடுமோ?

(40)
பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்
மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே.
    (பொ - ள்.) (மாயாகாரியமாகிய இவ்வுடல், இவ்வுலகம், இவ்வுலகியற் பொருள்கள் சிவபெருமான் திருவடியை அணையத்துணையாம்படி அவனருளால் தரப்பட்டன; இச் சார்பின் உண்மை யோர்ந்து அவன் திருவடியில் பற்றுவைத்தல் வேண்டும்.) உலகியல் பொருள்களில் சிறிதும் பற்றுக் கொள்ளாது சிவபெருமான் பற்றே கொண்டு வாழ்பவர் மெய்யுணர்வினராவர்; அடியேனும் அப் பெரியவர் போலப் பாசம் நீங்காத நிலையோடு நடிப்புச் செய்தேன்; அந் நடிப்பால் யான் பெரிதும் மோசம் போனேன். இது முறைமையாமோ!

(41)
நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே.
    (பொ - ள்.) நன்மை யீது என்றும் அறியேன்; தீமை யீது என்றும் அறியேன். யான் (எனது) என்னும் செருக்குடனின்றவன் யாவன் என்றும் அறியேன். அடியேன் சற்றும் அறிவில்லாதவன். இதற்குக் காரணம் என்னையோ?

(42)
இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்
ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே.
    (பொ - ள்.) இக்காலத்து யான் அடையும் துன்பம் இப் பிறப்பில் செய்ததனால் ஏற்பட்டுப் புதிதாக வந்ததல்லவே? இவ்வுண்மை ஒன்றும் தேவரீர் அறியாததன்றோ?

(43)
எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்
அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே.
    (பொ - ள்.) அடியேன் பல பல உலகில் இருவினைக்கீடாக எடுத்த பிறப்புகள் எத்தனை? அத்தனை பிறப்புகளிலும் அடியேன் அடைந்துள்ள துன்பங்களுக்கு அளவில்லை. அவற்றை யெல்லாம் நடைமுறையில் நீ யறியாததல்லவே? அறிந்ததல்லவோ?

(44)
இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்
அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே.
    (பொ - ள்.) இந்நாளில் அடியேன்மீது சிறிது இரக்கஞ் செய்து ஆட்கொள்ளாவிட்டால், காலன் கடுகவந்து சேருவன்; அந்நாளில் காத்தருளவல்லார் உன்னையன்றி யாருளர்?

(45)
உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ
சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே.