பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

534

    (பொ - ள்.) அடியேன் நிலைமையினை ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால், துன்பமானது என்னுள்ளத்தே தீயைப் போன்று இடைவிடாது எரிய மிகவும் நொந்தேன். அடியேன் முகத்தைப் பார்த்தருள்வாயாக.

(58)
பொய்யன்இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்
கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே.
    (பொ - ள்.) (அடியேனுக்கு வேண்டாதார்) 'இவன் பொய்யன்' எனத் தேவரீரிடம் கோட்சொல்வராயின் அதனைக் கேட்டு எளியேன் கண்போன்றவனே! அடியேனைக் கைவிட்டுவிட வேண்டா.

(59)
எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே.
    (பொ - ள்.) அடியேன் எண்ணத்தினை யறிந்தும், மெலிவினை யறிந்தும் ஏழையேன் உய்யுமாறு திருவருள் புரிவாயாக.

(60)
நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்
காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே.
    (பொ - ள்.) அடியேனை ஒரு பொருளாகக் கொள்ளாது, இரு வினைக்கீடாக அடைய வேண்டிய இன்பத் துன்பங்களை எளியேனுக்கு வரவொட்டாமல் (உன்னடியானென்று உணர்த்த) எல்லாவற்றையும் ஆக்கி அளித்து அழித்துவரும் செயல்களில் எளியேனை விலக்கியருள்வாயாக.

(61)
உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே.
    (பொ - ள்.) தேவரீரையே உளமார உள்கி உன் பெருநிறைவினுள்ளே இன்புற்று உலாவும் அடியேனை இன்னமொரு தாய் வயிற்றில் புகவிடாமல் காத்தருள்வாயாக. உள்குதல்-தியானித்தல்.

(62)
பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா
வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே.
    (பொ - ள்.) அடியேனைக் காத்தருளும் பொறுப்புத் தேவரீருக்கென்று உண்மையாகவும் உறுதியாகவும் எண்ணியொழுகும் பழக்கமே மாறாதிருக்கும்படி அடியேனுக்குத் தந்தருளவேண்டும். எளியேன் வாழ்விற்கு இனிய முதலே! பரம் - பொறுப்பு.

(63)
வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்
சிந்திக்க நின்னதருள் செய்யாய் பராபரமே.
    (பொ - ள்.) தேவரீரை வணங்கி நின்திருவடியினை மறவாக் கடனாகக் கொண்டு நாடும்படி நின்திருவருள் செய்வாயாக. நாடுதல் - சிந்தித்தல்.

(64)