பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

54

துகளறுசங் கற்பவிகற் பங்களெல்லாந்
    தோயாத அறிவாகிச் சுத்த மாகி
நிகரில்பசு பதியான பொருளை நாடி
    நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்.
     (பொ - ள்.) "அகரவுயி . . . பான்மையாகி" - அகரமாகிய உயிரெழுத்து ஏனை உயிரெழுத்துக்களுக்கும், மெய்யெழுத்துக்களுக்கும் தான் ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று இயக்குந் தன்மைபோல் (விழுமிய முழுமுதல்வனாகிய) சிவபெருமான், அறிவுள்ள உயிர்களோடும் அறிவில்லாத உலகத்தோடும் நிறைந்து நின்று அவைகள் அனைத்துமாகி, சொல்லப்படுவனவாகிய ஏனைப்பொருள்கள் எல்லாமாகி, அவற்றுக்கு வேறுமாகி, அவை கடந்த சொல்லொணாத மேலான பெரும்பொருளாகி, உரையிறந்த பான்மையதுமாகி;

     "துகளறுசங் . . . செய்வாம்" - குற்றமற்ற கொள்கைகளில் வரும் வேறுபாடுகள் அனைத்தினும் பற்றாத மூதறிவாகித் தூய்மையாகி, ஒப்பில்லாத (ஆருயிர்கட்குப் பேருயீராம்) இறைவனான மெய்ப் பொருளை இடையறாதெண்ணிப் பெருமூச்சுவிட்டுப் பேரன்பாகிய பெருங்காதலால் நினைதல் செய்வாம்.

     (வி - ம்.) அகிலாண்டம் - அனைத்துலகங்களும் அனைத்துயிர்களும். பரம் - மேல். துகள் - குற்றம். சங்கற்பம் - கொள்கை. விகற்பம் - வேறுபாடு. தோய்தல் - பற்றுதல். அறிவு - மூதறிவு; மெய்யுணர்வு. பசுபதி - ஆருயிர்த் தலைவன்; இறைவன்.

     விழுமிய முழுமுதல்வன் மெய்ம்மையினை உணர்த்தும் முழு ஒப்பு அகரவுயிர் ஒன்றேயாம். அவ்வுண்மை தெளிந்தே திருவள்ளுவநாயனார் தாம் பாடியருளிய கடவுள்வாழ்த்தின் முதற் செய்யுளின்கண் அகரத்தை அமைத்துள்ளனர். அது வருமாறு:

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு."
- திருக்குறள், 1.
மேலும் திருமாமறைகளில் வருவதூஉங் காண்க :

"சிகரம் முகத்திற் றிரளா ரகிலும்
    மிகவுந் திவரும் நிலவின் கரைமேல்
 நிகரின் மயிலா ரவர்தாம் பயிலும்
    நெல்வாயி லரத் துறைநின் மலனே
 மகரக் குழையாய் மணக்கோ லமதே
    பிணக்கோ லமதாம் பிறவி யிதுதான்
 அகரம் முதலின் எழுத்தா கிநின்றாய்
    அடியே னுய்யப்போ வதொர்சூ ழல்சொல்லே."
- 7. 3 - 7.