பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


543


வேறுபடக்கூறாது ஒன்றாகக் கூறும் மெய்ப்புணர்ப்புமுறையான் ஒன்றாகக்கூறுவர்; மெய்ப் புணர்ப்பென்பது சுத்தாத்துவிதம். அங்ஙனங்கூறுவது விளக்கிருக்கும் இடைத்தையும் ஆகுபெயரான் விளக்கென்று கூறுவதனோடொக்கும்.

(103)
பாராதி நீயாப் பகர்ந்தால் அகமெனவும்
ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரமே.
     (பொ - ள்) "நிலம், நீர், நெருப்புயிர், நீள், விசும்பு. நிலாப்பகலோன்" ஆகிய ஏழு மாயாகாரியப் பொருள்களும்திருவருளால் இயைந்தியக்கப்படுமுறைமையால் சிவபெருமான் திருவுருவங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றது. அதுபோல் ஆருயிரையும் சொல்லப்படும். அந்தமுறையில் உயிரும் சிவனென்று முகமனாகக் கூறப்படும். அவ்வளவேயன்றிப் பிறிதில்லை யென்க.

     (வி - ம்) கற்றுவல்ல நன்மாணவனைக் கற்பித்த நல்லாசான் பெயரால் அழைத்து அவன் இவனே என வழுத்தி வணங்கி வழிபடுதல் மேலதற் கொப்பாகும்.

(104)
பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன்
மெய்யருளே அன்றோ விளம்பாய் பராபரமே.
     (பொ - ள்) காரியவடிவமாகக் காணப்படும் இவ்வுலகமும் உலகியற் பொருள்களும் நிலையாகவுள்ளனவல்ல, (தோன்றியபடியே காரணத்தில் ஒடுங்குந்தன்மையுடையன என்னும் மெய்ம்மையுணர்வு தோன்றுதற்குக் காரணமாகவுள்ளது) நாயனீருடைய திருவருளேயன்றோ? விளம்பியருள்வாயாக.

(105)
வருவான்வந் தேன்எனல்போல் மன்னியழி யுஞ்சகத்தைத்
தெரிவாக இல்லையென்ற தீரம் பராபரமே.
     (பொ - ள்) (சொல்லும் பொருளுமாய்ச் சுட்டியுணரப்படும்) இவ்வுலகம் நீர்க்குமிழிபோற்றோன்றி விரையக்கெடும் தன்மையுடையது. நிலைபெறுவதுபோற்றோன்றி நிலையாதொடுங்கும் இவ்வுலகத்தைத் தெளிவாகத்துணிந்து இல்லையென்றுரைக்கும் உரனுடைமை வரவிருக்கும் ஒருவன் துணிவுபற்றி வந்தேன் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறுவது போன்றாகும்.

     (வி - ம்) துணிவுபற்றிக்கூறும் உண்மை வருமாறு :

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்"
- திருக்குறள், 3.
"வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
 ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
 இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
 விரைந்த பொருள என்மனார் புலவர்."
- தொல், சொல், 241
(106)