பார்க்கின்அண்ட பிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே | யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே. |
(பொ - ள்.) அண்டாமாகிய உலகங்களும் பிண்டமாகிய உலகத்துயிர்களும் ஆராய்ந்து பார்க்குமிடத்து நின்திருவாணை வழியன்றி அவற்றுக்குத் தனியாக ஒரு செயலுமில்லை; முதல்வனே.
(117)
ஒன்றே பலவே உருவே அருவேயோ | என்றே அழைப்பதுன்னை என்றோ பராபரமே. |
(பொ - ள்.) தேவரீரை, அடியேன், ஒன்றெனவோ? பல எனவோ? வடிவினர் எனவோ? வடிவில்லாதவ ரெனவோ? அறுதியிட்டுக் கூறமுடியாமையான் எல்லாமாய் வாழ்த்தி அழைப்பது எந்த நாளிலோ?
(118)
செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின் | ஒப்பில் தியானமென ஓர்ந்தேன் பராபரமே. |
(பொ - ள்.) அடியேன் திருவருட்டுணையால் நின்பொருள்சேர் புகழைப் புகல்வது அனைத்தும் சிவஞ்செய்தலாமெனவும், நின்திருவடியினை நாடுவதெல்லாம் உள்குதலாகிய தியானமெனவும் உணர்ந்தேன்; சிவஞ்செய்தல் - செபஞ் செய்தல்.
(119)
ஆரிருந்தென் ஆர்போய்என் ஆரமுதாம் நின்னருளின் | சீரிருந்தால் உய்வேன் சிவமே பராபரமே. |
(பொ - ள்.) குறைவிலா மங்கல குணத்தனாகிய சிவபெருமானே! இறப்பினின்றும் அதன்பின் பிறப்பினின்றும் காத்தருள முடியாத நிலையிலுள்ளார் யாவரிருந்ததனால் வரும் பயன் யாது? அல்லது பிரிந்துபோய்விட்டதனால் வரும் இழப்பு யாது? நின்னுடைய திருவருளின் சீரிருந்தால் அடியேன் கடைத்தேறுவேன்.
(120)
வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும் | அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே. |
(பொ - ள்.) ஐயனே! வஞ்சனை பொருந்திய நஞ்சனைய நமன் செய்யும் துன்பத்திற்கும், கொடிய பிறவியிற் பட்டுழலும் துயரத்திற்கும் மிகவும் அஞ்சி அடியேன் உன் திருவடியினை யடைந்தேன்.
(121)
எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக் | கந்தப் படிவருவ தன்றோ பராபரமே. |
(பொ - ள்.) அடியேங்களுடைய வினைக்கீடாக வரும் இன்பத் துன்பங்களும் தேவரீர் திருக்குறிப்புத் திருவாணையின்வழி வருவன அன்றோ?
(வி - ம்.)சிவனை மறவா நற்றவத்தால் வினைத்துன்பங்களும் "வெற்பிற்றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்பனிக் கெடுமாறது"