தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர் | செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே. |
(பொ - ள்) திருவருட்டொடர்பால் சிவனுக்கு அடிமையாம் தம்முயிரின் நிலைபோல் எவ்வுயிரின் நிலையும் அவனுக்கு அடிமையாம் நிலையே என எண்ணும் குளிர்ந்த அருளுடைய செம்மை மனத்தார்க்கு அடியேன் எக்காலத்திலும் ஏவல் புரிவேன்.
(வி - ம்) உயிர்கள்எல்லாம் வாழும் உடல்கள், ஆண்டவன் தண்ணளியால் ஆக்கியளித்த இல்லங்களே. அவற்றுள் ஓரில்லாமாகிய உடம்பில் வாழும் உயிர், மற்றோரில்லமாகிய உடம்பில் வாழும் உயிர்க்கு உதவுவதன்றி ஊறு செய்வதுண்டாமோ? உதவியும் ஊறும் உடம்பின் வாயிலாகவே உயிர்க்குச் செய்தல் கூடும். அம்முறையால் இறை நாட்டமுடையார் எவ்வுயிர்க்கும் குறை நினையார்.
(149)
விண்ணுக்கும் விண்ணாகி மேவும்உனக் கியான்பூசை | பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரமே. |
(பொ - ள்) பூதத் தொடர்பாம் வானம் தோன்றுவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் முறையே வினைமுதற்காரணமும் நிலைக்களமுமாக நிற்பது நின்னுடைய மேலாம் திருவருட் பெருவெளி (சிதாகாயம்). அப் பெருவெளியில் நின்றருளும் நின்திருவடிக்கு அடியேன் எவ்வாறு பூசை பண்ணிநிற்பதெனத் திருவாய்மலர்ந்தருள்வாயாக. இப் பூசை அகப்பூசையாகும்.
(150)
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே | மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே. |
(பொ - ள்) திருவருள் நாட்டத்தால் செய்யப்படும் அகவழி பாட்டிற்கு1 அடியேன் நெஞ்சகமே திருக்கோயிலாகும். நின்திருவடியினை இடையறாது நாடும் நினைவே நறுமணப்பொருள்களாகும்; அடியேனின் இறவா இன்ப அன்பே திருமுழுக்குக்குரிய வான்புனலாகும். இம்முறையாக எளியேன் செய்யும் பூசையினை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு வந்தருள்வாயாக.
(151)
கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான | சிட்டருனைப் பூசை செய்வார் பராபரமே. |
(பொ - ள்) புன்னெறியிற் செலுத்தும் ஆணவப் பேயின் ஆற்றல் (ஒளிமுன் இருள்போல்) ஒடுங்கியவீடத்துத் திருவருளால் மேலாம் நன்னெறியில் நிற்கும் நல்லார் நின் திருவடிப்பூசையினை ஒல்லும் வகை ஓவாது செய்வர். கெடுதல் - ஒடுங்குதல். ஆற்றல் - சத்தி.
(152)
கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின் | மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே. |
1. | 'மறவாமை' 12. வாயிலார். |