பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


565


கொள்ளைவெள்ளத் தண்ணருள்மேற் கொண்டுகழித் தார்த்
கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே.[திழுத்தால்
     (பொ - ள்) நின் மிக்க குளிர்பொருந்திய திருவருட்பெருவெள்ளமானது சுழித்தார்த்துச் செல்லும்போது அடியேனுடைய கள்ள மனக் கப்பலானது, அச் சுழியால் இழுக்கப்பட்டு அதன்கண் அழுந்துவதல்லாமல், எங்கே மேலோங்கிக் காணும்? (காணாதென்றபடி.)

(212)
எக்கலையுங் கற்றுணர்ந்தோ மென்றவர்க்குஞ் சம்மதஞ்சொல்
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே.
     (பொ - ள்) உலகியற் கல்வியாகிய இலக்கிய இலக்கணங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தோமென்னும் செருக்கால், கேட்போர் மெச்சும்படி விரித்துரைப்பது, பலரோடும் சொற்போரிடுவது முதலியவற்றால் திறமை பெற்றவர்க்குத் திருவடிப் பேரின்பம் வாய்த்து வருமோ? (வாராதென்ப, இறை நூல் கற்றுச் சிவவழிபாடியற்றிவரும் பேரன்பரே பேரின்பம் பெறுவர்.)
(213)
கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர்
சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே.
     (பொ - ள்) நீரை மறைத்துப் பரந்திருக்கும் நீர்ப்பாசியினை விலக்குதற்பொருட்டு, நீரிற் கல்லினை எறிவர். கல்லெறியப்பட்ட இடத்தில் பாசம் அகலும்.1 ஏனைய இடங்களில் பாசம் அறாதிருக்கும்; பாசம் கலைந்த இடத்தில் நல்ல நீர் நன்றாகக் காணப்படும். அதுபோல் இறை நூல் கற்றுணர்ந்த நல்லோர் திருவருளால் வாய்க்கப்பெற்று அவர்கூறும் மெய்யுணர்வு மொழிகளால் திருவடியுணர்வு கைகூடும்.
(214)
நின்னை யுணர்ந் தோர்கடமை நிந்தித்த பேயறிஞர்
என்ன கதிபெறுவார் எந்தாய் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் நின்திருவடியிணையுணர்ந்த சிவனடியார்களை உண்மையுணராது இகழ்ந்த, பேயனைய கொடியோர், எத்தகைய இருளுலகையடைந்து 2 எவ்வகைய துன்பத்தை யடைவரோ? எந்தையே!

(215)
என்னதுயான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்நின்
சன்னிதியாம் நீபெரிய சாமி பராபரமே.
     (பொ - ள்) என்னது யான் என்னும் புறப்பற்று அகப்பற்றாகிய செருக்குத் திருவருளால் அறப்பெற்றோர் எவ்விடத்திலிருந்து நின் திருவடியினை நோக்கினாலும் அங்கெல்லாம் நின்திருவடியே காணப் படுகின்றது. (யாண்டும் நின்திருமுன்னே உள்ளது.) நீயே மாதேவன்.

(216)
 
 1. 
'பாசிபடு'. சிவஞான சித்தியார், 8. 4 - 3. 
 2. 
'ஆண்டான்'. 10. 520.