பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

568
மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழிஅருள்
வார்த்தையென்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே.
     (பொ - ள்) உடையான் எனப்படும் மகேசுரவடிவம் இருபத்து நான்கும் வாழ்க; அடியேனை ஆளாக் கொண்டருளிய மோனகுரு வாழ்க; திருவருள் மொழியாம் "சிவசிவ" என்னும் சித்தாந்தப் பெருமொழி என்றும் வாழ்க. மெய்மை நீங்கா மேலாம் காதல்சேர் சிவனடியார்கள் வாழ்க.

     (வி - ம்.) மூர்த்தியின் இயல்பு முன்னோன் உணர்வின்கண் முன்னும் முன்னத்தின் குறிப்பு வடிவேயாம். இஃது எழுத்திற்குக் கூறப்பட்ட வரிவடிவு போன்றாகும். தெய்வத் திருவுருவத் தெய்வத்துணர் நினைவாம், உய்ய வுலகுயிர்க்கா வுற்று.

(229)
 
சொல்லும் பொருளுந் தொடரா அருள்நிறைவில்
செல்லும் படிக்கருள்நீ செய்தாய் பராபரமே.
     (பொ - ள்) திருவருளை முன்னிட்டல்லாமல் சொல்லாலும் பொருளாலும் தொடரவொண்ணாத நின்திருவடி நிறைவில் அடியேன் சென்று சேரும்படி நீ திருவருள் செய்தனை.

(230)
 
இற்றைவரைக் குள்ளாக எண்ணரிய சித்திமுத்தி
பெற்றவர்கள் எத்தனைபேர் பேசாய் பராபரமே.
     (பொ - ள்) ஆண்டவனருளால் மீண்டும் உலகு உளவான காலந்தொட்டு இந்நாள்வரை அகத்தவப்பயனாம் எண்பெரும் பேறு பெற்றவர்களும், திருவருளால் செம்பொருட்டுணிவின் சிறப்பாம் திருவடிப் பேறுபெற்றுப் பேரின்பந்துய்ப்பவர்களும் எத்துணைப்பேர்? திருவாய் மலர்ந்தருள்வாயாக, (அளவிலர் என்பதாம்.)

     (வி - ம்.) சித்தி-அட்டமாசித்தி. முத்தி-சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவ முத்தி.

(231)
 
நாடும் நகரும்நிசா னாட்டிய பாளயமும்
ஈடுசெயு மோமுடிவில் எந்தாய் பராபரமே.
     (பொ - ள்) ஆட்சிக்குரிய நாடும், நகரும், ஆட்சியின் அடையாளமாகிய கொடியும், நால்வகைப் படைகளும் முடிவு காலத்தில் பெருமையைக் கொடுக்குமோ? எந்தையே! (கொடாவென்பதாம்.) நிசான் - கொடி. பாளயம் - படை.

(232)
 
தேடுந் திரவியமுஞ் சேர்ந்தமணிப் பெட்டகமும்
கூட வருந்துணையோ கூறாய் பராபரமே.
     (பொ - ள்) அரும்பாடுபட்டுத் தேடித் தொகுத்த பெரும் பொருளும், அப் பொருள்களுடன் மணிகளும் வைத்துப் பூட்டப்பட்டுள்ள அழகிய பேழைகளும் ஒருவர் இறக்குங் காலத்து அவருக்கு வழித்துணையாகக் கூடவருவதுண்டோ? திருவாய்மலர்ந் வருள்வாயாக, (வாராஎன்பதாம்.)

(233)