(பொ - ள்) மாயாகாரியமாகிய இவ்வெளியுண்மையினைத் திருவருளால் கண்டு ஆய்ந்து தெளிந்து நீக்கிய திருவருட் பேரறிவால், திருச்சிற்றம்பலம் எனப்படும் அந்த அருட்பெருவெளிக்கே அடியேன் வெளிப்படையாகச் சார்ந்துள்ளேன். வெளி - பூதஆகாயம். உண்டல் - உண்மைகாண்டல். ஏப்பமிடல் - தெளிதல். வெளியாய் - வெளிப்படையாய்.
(272)
உணர்த்தும்உனை நாடா துணர்ந்தவையே நாடி | இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே. |
(பொ - ள்) அடியேன் உயிர்க்குயிராய் உணர்விற்குணர்வாய் நின்று உணர்த்தியருளும் நின்திருவருளை நாடாமல் எளியேனால் உணரப்பட்ட உலகியற் பொருள்களையே நாடி அவற்றோடிணங்கும் எளியேனுடைய அறியாமையை என்ன என்று கூறுவேன்?
(273)
உண்டுபோல் இன்றாம் உலகைத் திரமெனவுள் | கொண்டுநான் பெற்றபலன் கூறாய் பராபரமே. |
(பொ - ள்) காரிய வடிவமாகக் காணப்படும் இவ்வுலகம் திருவருளாணையினால் காரணமாயையினின்றும் தோற்றுவிக்கப்பட்டது. ஒடுக்குங்காலத்துத் தோன்றும் பொருள்வடிவம் நீங்கி ஆற்றல் வடிவாய்த் தோற்றமுறாதொடுங்கும். அத்தகைய நிலையில்லாத இவ்வுலகினை நிலையானதென்று1 மனங்கொண்டு ஏழையேன் அடைந்த பயன் தான் யாது? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(274)
உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே | கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே. |
(பொ - ள்) உலகியல் நிகழ்ச்சிகளனைத்தும் திருவருளின் திருவாணையின்வழி நடக்கின்றன என்னும் உண்மையினைத் திருவருளால் அடியேன் உணர்ந்தேன்; உணர்ந்ததும் எளியேனை வஞ்சித்துத் தன் வழியே இழுக்கும் மனம் ஒடுங்கிவிட்டது.
(275)
சித்த மவுனஞ் செயல்வாக் கெலாமவுனஞ் | சுத்த மவுனம்என்பால் தோன்றிற் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் அடியேன் அறிவின்கண் தூய மோன நிலை கைகூடியபின் எளியேன் மனமும், சொல்லும், செயலும் உடனாக மோன சமாதியை அடைந்து எளியேன்மாட்டுத் துணையாக நிற்கும்.
(276)
எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்குங் | கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே. |
(பொ - ள்) அளவில்லாத பல கோடிக்கணக்கான ஆருயிர்கள் எவ்வளவோ? அவ்வளவுக்கும் கண்ணின் மணியாய்க் கலந்தருளிய திருவருட்கண்ணே!
(277)
1. | 'மண்தனில்.' சிவஞானசித்தியார், 6. 1 - 2. |