"சொல்லரிய . . . . . . குருவே" - (திருவடிப் பேரின்பத்தை எய்துவிக்கும் நெறி சொல்ல வொண்ணாதது, நினைக்க முடியாதது) சொல்லுதற்கரிய ஒளிநெறியை (சொல்லாமற் சொல்லும் கையடையாளமாகிய) ஒரு சொல்லால் அறிவுறுத்தியருளி, (உணர்விற்குணர்வாய் உள்கலந்துணர்த்தும்) உண்மைப் பேரின்பநுகர்வினை உணர்த்தியருளிச் செந்நிறமும் செம்மையும் ஒருங்கமைந்த இருக்கைமீது, கல்லால மரத்தடியில் எழுந்தருளியிருக்கின்ற, செம்பொருட்டுணிவாகிய சித்தாந்தப் பேற்றிற்குரிய விழுமிய முழுமுதலே! திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!
(வி - ம்.) அங்கம் - உடம்பு. புளகித்தல் - மயிர்சிலிர்த்தல். ஆவேசம் - வெறி சங்கரன்-இன்பத்தையளிப்பவன். சொரூபானுபூதி - உண்மைஇன்ப நுகர்வு, சம்பு - பேரின்பநிலைக்களம்; சுகோதய தாயகம்.
பெறுதற்கரிய மக்கட்பிறப்பின் பெரும்பயன் திருவருளால் அறிதற்கரிய உண்மை அறிவின்பப் பிழம்பினனாகிய சிவபெருமான் திருவடிக்கு நறுமணமிக்க மலர்கொண்டு பொறுமையுடன் போற்றி மறை புகன்று தூவி வழிபடுதலே யாம். அப் பணியினைச் செய்யும் பேறுபெற்ற கை 'அங்கை' எனப்படும். இவ்வுண்மை வருமாறுணர்க:
| "கைகாள் கூப்பித்தொழீர் கடி |
| மாமலர் தூவிநின்று |
| பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் |
| கைகாள் கூப்பித்தொழீர்" |
| - 4. 9 - 7. |
அங்ஙனம் மலர் தூவிப் போற்றுதலும் அவரவர் தாய்மொழியிலுள்ள மந்திரமொழி நவின்று போற்றுதல் வேண்டு மென்னும் உண்மையினை வருந்திருமாமறையீன் உணர்க:
| "ஆக்கை யாற்பயனென் - அரன் |
| கோயில் வலம்வந்து |
| பூக்கையா லட்டிப் போற்றியென் னாதவிவ் |
| ஆக்கை யாற்பயனென்" |
| - 4. 9 - 8. |
"போற்றி போற்றி" என்னும் செந்தமிழ்த்திருமாமறை மந்திரமுரைத்து மலர் தூவி வழிபடவேண்டு முறைமைகளைக் கழகத்து ஆயிரத்தெட்டாவது வெளியீடாகிய பன்னிருதிருமுறைப் பெருந்திரட்டுப் பக்கம் 324இல் காண்க.
மேலும் இவ்வுண்மைகளை வரும் திருப்பாட்டுக்களான் உணர்க :