பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

580
கொலைகளவு கட்காமங் கோபம்விட்டால் அன்றோ
மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே.
     (பொ - ள்) கொலையும், களவும், கள்ளும், காமமும், வெகுளியும் ஆகிய ஐம்பெரும் பாவங்களையும் திருவருளால் விட்டொழித்தாலல்லாம் நின்திருவருளாம் பெருமைமிக்க மலையிலக்கு நிலையாக வாய்க்குமோ? (ஏனையார்க்கு வாய்க்காதென்க.)

(288)
 
தன்னைஅறி யாதுசகந் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறியஅருள் உண்டோ பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் தன் உண்மை இன்னதெனத் தெளியாது, உலகத்தின்கண்ணும் உடலின்கண்ணும், உலகியற் பொருளின்கண்ணும் பற்றுவைத்து அவையே தானென்று மயங்கி, இருந்துவிட்டால், எளியேனுக்கு நின்திருவடியினை உணரும்படியான திருவருளுண்டாமோ? (உண்டாகாதென்க)

(289)
 
ஒன்றிரண்டென் றுன்னா உணர்வுகொடுத் துள்ளபடி
என்றும்என்னை வையாய் இறையே பராபரமே.
     (பொ - ள்) ஆருயிரும் பேருயிரும் மெய்ப்புணர்ப்பாம் அத்துவித நிலையின்கண் கலந்து ஒன்றாய் விடுமென்னுங் கொள்கையும், யாண்டும் கலவாது வேறாகவே இருக்குமென்னுங் கொள்கையும், பொருந்தாக் கொள்கைகளாகும். அங்ஙனம் நினையாமல் மெய்யுணர்வினைத் தந்து உள்ளபடியாக அடியேனை வைத்தருள்வாயாக.

     (வி - ம்.) ஆருயிர் - சீவான்மா. பேருயிர் - பரமான்மா. இவ்விரண்டும் திருவருளால் அத்துவிதமாகப் புணருங்கால் கெட்டு, ஒன்றாகாமலும், கெடாது வேறாகாமலும், கூடி ஆண்டான் அடிமை வழக்காய்1 ஒன்றுமிரண்டும் இன்றாகாமல் அடங்கி அடியின்பந்துய்க்கும் ஆருயிர்.

(290)
 
கருதும்அடி யார்கள்உளங் காணவெளி யாகுந்
துரியநிறை வான சுகமே பராபரமே.
     (பொ - ள்) திருவருளை முன்னிட்டு நின்திருவடியை இடையறாது நினையும் மெய்யடியார்களுடைய மனங் காணும்படி உள்ளத்து அறிவு வெளியாகிய நாலாம் நிலைக்கண் விளங்கும் நிறைந்த பேரின்பமேயாம். நாலாம்நிலை - துரியநிலை.

(291)
 
பொய்குவித்த நெஞ்சன்அருட் பொற்பறிந்து திக்கனைத்துங்
கைகுவித்து நிற்பதெந்தக் காலம் பராபரமே.
     (பொ - ள்) வஞ்சமனத்தினையுடைய எளியேன் எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் நின்திருவருளின் மேம்பாட்டினை யறிந்து எல்லாத் திசைகளிலும் நின்திருவடியினை நினைந்து கைகூப்பித் தொழுது வணங்கி நிற்கும் நன்னாள் எந்நாளோ?

(292)
 
 1. 
'உற்றவர்.' இருபாவிருபது, 20.