பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

582
தேகாதி பொய்யெனவே தேர்ந்தவுப சாந்தருக்கு
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.
     (பொ - ள்) உடல், கலன், உலகம், உணவுகளாகக் காணப்படும் மாயாகாரியப் பொருள்கள் நிலையுடையன அல்ல. அதனால் அவை பொய்யென வழங்கப்படும். அங்ஙனம் பொய்யென்று திருவருளால் கண்டு தெளிந்த அமைதியுடையோர்பால் "செருக்குச், சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா வுவகை" என்று சொல்லப்படும் அறுவகைக் குற்றமும் உண்டாகுமோ? மொழிந்தருள்வாயாக.

     (வி - ம்.) குற்றம் ஆறையும் பின் வருமாறும் வழங்குப : காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனவும்; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனவும் வழங்குப.

(298)
 
சாதனையெல் லாம்அவிழத் தற்போதங் காட்டாதோர்
போதனைநீ நல்குவதெப் போதோ பராபரமே.
     (பொ - ள்) (பயிற்சி நிறைந்து பயனெய்துதல் முறைமையாம். இது பாடம் படித்துத் தேறுவது போன்றாகும். காலமெல்லாம் பயிற்சியிலேயே கழிந்தாற் கைகூடும் பயன் யாது? அதனால்) பயிற்சியாகிய சாதனைகளனைத்தும் தாமே நழுவிவிடும்படி தன்முனைப்பு எடுக்காத வகை, ஓர் அருமறையினைத் தேவரீர் அடியேனுக்குச் செவியறிவுறுத்தியருள்வது எந்தக் காலத்தோ? அருமறை - உபதேசம். அவிழ - நழுவ.

(299)
 
ஒன்றுமறி யாவிருளாம் உள்ளம் படைத்தஎனக்
கென்று கதிவருவ தெந்தாய் பராபரமே.
     (பொ - ள்) திருவடித் தெளிவாம் மெய்யுணர்வுத் தொடர்பு ஒன்றையுமுணராத ஆணவ இருள்வடிவாகிய மனத்தையுடைய அடியேனுக்கு எந்தையே, நின்திருவடிப்பேறாம் நன்னிலைமை கைவருவது எந்நாளிலோ?

(300)
 
சிந்திக்குந் தோறும்என்னுள் சிற்சுகமாய் ஊற்றூறிப்
புந்திக்குள் நின்றஅருள் பொற்பே பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் அடியேன் நின்திருவருட் கோலத்தினை உள்ளுந்தோறும் எளியேன் உணர்வின்கண் பேரறிவுப் பேரின்பப் பேரூற்றாய் நிற்கும் திருவருட்பொலிவே.

(301)
 
என்றும்அடைந் தோர்கட் கிரங்கார் குறிப்பனைத்துங்
கன்றையுதை காலி கதைகாண் பராபரமே.
     (பொ - ள்) எக்காலத்தினும் தந்துன்பம் நீக்குந் தக்காரையடைந்தோர்க்கு அவர் மனமிரங்கி உதவி செய்யாதிருப்பாராயின் அவர் நினைவெல்லாம் அன்பொடு கன்றானது தன் தாய்ப்பசுவின் மடுவில் வாய்வைத்துப் பால் பருக வந்த இடத்து அத் தாய்ப்பசு அக் கன்றை