பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

584
நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவுடையார்
ஆசைக் கடலில் அழுந்தார் பராபரமே.
     (பொ - ள்) "இறவாத இன்ப அன்பாம்" பெருநேசத்தால் நின்திருவடியினை நினைக்கும் நற்றவ நினைப்புடையார், பிறப்புக்கு வித்தாம் ஆசைப்பெருங்கடலில் மூழ்கி அழுந்தார்.

(307)
 
கள்ளாது கட்டுணவுங் காரியமோ நானொருசொல்
கொள்ளாத தோடமன்றோ கூறாய் பராபரமே.
     (பொ - ள்) அடியேன் குற்றமொன்றும் புரியாதிருக்கவும் எளியேனுக்குப் பிறப்பு வந்தது எப்படி? களவு செய்யாத ஒருவன் கால் விலங்கும் கைவிலங்கும் சிறைக்கோட்டமும் அடைவது பொருந்துமோ? (அங்ஙனமன்று) செம்பொருட்டுணிவின் பெருமொழியாம் சிவமந்திரத்தைச் சிவகுருவின் வழியாகக் கேட்டுய்யவே பிறப்பு வந்தது. அது செய்யாமையே பிறப்புக் குற்றம்.

     (வி - ம்.) நோயாளி மருத்துவமனை புகுவதும், மாணவன் பள்ளி புகுவதும், வறியவன் உழைப்புத் துறை புகுவதும் முறையே அவர்தம் நோயும், அறியாமையும், வறுமையும் ஆள்வினையால் நீங்கப்பெற்று நலமும், நல்அறிவும், நற்பொருளும் எய்தி நலமுறற்கேயாம். அது போல், ஆருயிர்கட்குப் பிறப்பு வருவது அறிவை மறைத்து அறியாமையைச் செய்யும் ஆணவவல்லிருளகன்று நற்றவத்தால் மெய்யுணர்வு கைவந்து நல்லாராய்ச் சிவபெருமான் திருவடியணைந்து நீங்காதோங்கும் பேரின்பப் பெருவாழ்வு துய்த்தற்கேயாம்.

(308)
 
சென்றவிட மெல்லாந் திருவருளே தாரகமாய்
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.
     (பொ - ள்) செல்லும் இடங்களனைத்தினும் திருவருள் நிலைக்களமே தாங்குவதால் அத் திருவருளே சார்பெனத் தெளிந்து அவ்வருளொடு கூடிப் பிறழாது நின்றவர்க்கே பேரின்ப நிட்டை பெறுவதுண்டாம். அருளொடு நிற்றல் : சிவராசயோகம்.

(309)
 
நீட்சி குறுகல்இல்லா நித்யசுகா ரம்பசக
சாட்சியாம் உன்னைவந்து சார்ந்தேன் பராபரமே.
     (பொ - ள்) (ஆருயிர்கள் உறைவிடத்துறைவியாய்1 நிற்கும் தன்மைய) தேவரீர் ஒரு காலத்தில் யாண்டும் நீக்கமறப் பரந்து நிற்கும் பெரும் நிறைவியாய், ஒரு காலத்து (ஆருயிர்போல்) ஒரு புடை நிறைவியாய்த் திகழ்பவரல்லர். அவ்விரண்டுமில்லாத என்றும் பொன்றாத நின்திருவடிப் பேரின்பத் தோற்றமும் துய்ப்பும் கண்டும் நுகர்ந்தும் வாழத் தேவரீரை வந்தடைந்தேன்.

     (வி - ம்.) முதல்வன் மாயா காரிய உலகுடல்கள் உண்டாதற் பொருட்டு வினைமுதற் காரணனாவன். மாயை முதற் காரணம். திருவருளாற்றல்

 
 1. 
'வசிப்பெனும்.' 4. 45 - 2.
 " 
'அசித்தரு'. சிவஞானசித்தியார். 4. 2 - 15.