பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

586
     (பொ - ள்) (தோன்றி யொடுங்குந் தன்மையால் நிலையில்லாதது உலகம் என்ப.) மாயாகாரியப் பொருள் அனைத்தும் நிலையிலாத் தன்மையால் பொய்யென்று சொல்லப்படும். அப் பொய்யான உலகத்தின்கண் வைக்கப்படும் பற்று நீங்க உண்மை யறிவின்பமாம் சிவன் உணர்வு கைகண்டவர்கட்கு வீடுபேறெய்துதற்கு (திருவடிப் பெருவாழ்வு எய்துதற்குச்) சிறிதும் ஐயமில்லை; ஐயமில்லை.

(315)
 
மந்திரத்தை உன்னி மயங்கா தெனக்கினியோர்
தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.
     (பொ - ள்) திருமாமறை திருமாமுறைகளின் வழிவாராத பிறமந்திரங்களை நினைந்து மயங்குதல் செய்யாது அடியேன் உய்யத் தேவரீர் ஒரு வழிவகையைக் கற்பித்தருளத் தகாதோர்? (தகும் என்பதாம்.) தந்திரம் - வழிவகை, சூழ்ச்சி; உபாயம்.

(316)
 
விண்கருணை பூத்ததென்ன மேவி உயிர்க்குயிராய்த்
தண்கருணை தோன்றஅருள் தாய்நீ பராபரமே.
     (பொ - ள்) அறிவு வெளியாகிய திருச்சிற்றம்பலத்தின்கண் பெருந் தண்ணளி மலர்ந்தது போன்று உயிர்க்கு உயிராக உணர்வின் கண் பொருந்தித் தன்னுடைய தண்ணளியாகிய கருணைதோன்றத் திருவருள் புரியும் சீரிய தாயே.

(317)
 
தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.
     (பொ - ள்) உண்மையுணராது ஆருயிர் தானே தலைவன் என எண்ணிக்கொண்டு உலகு உடல்களில் பற்றுக்கொண்டு மயங்கி நின்றால் மெய்யுணர்வு கைவராது; அங்ஙனமின்றித் தான் அடிமையென்றும் விழுமிய முழுமுதல்வனே தலைவனென்றும் அவன் அருளால் அம் முதல்வனே தானாக நிற்கப் பெற்றால் உலகுடல் கரணமெல்லாம் அம் முதல்வன் வண்ணமாய் நிகழும்.

     (வி - ம்.) உயிர் தான் தலைவனென்று எண்ணி இயங்கும்போது உலகுடல் கரணமெல்லாம் அவ்வுயிர்ச் சுமையாய் நிற்கும். அஃதொழிந்து தன்னை யடிமையென்றும் முதல்வனே அவற்றுக்கு உரியானென்றும் எண்ணி யொழுகும்போது அவை அருட்சுமையாய் அம் முதல்வன் இயக்க இயங்கும் உயிராய் எல்லாம் சிவன் செயலாய் அவ்வுயிர் இயங்கும்.

(318)
 
ஏங்கி இடையும்நெஞ்சம் ஏழையைநீ வாவென்றே
பாங்குபெறச் செய்வதுன்மேற் பாரம் பராபரமே.
     (பொ - ள்) நின்திருவருளை யடையும் பொருட்டு ஏக்கத்தை யடைந்து நைகின்ற மனத்தினையுடைய அடியேனைத் தேவரீர் திருவருள் சுரந்து நீ வருவாயாக என அழைத்தருளுதல் தேவரீருக்குரிய பொறுப்பாகும். பாரம் - பொறுப்பு.

(319)