பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

60

நிற்கும் சாதகாசாரியனைச் சிவபெருமான் தூண்டிச் செலுத்தி அவர்க்குச் சமயதீக்கை புரிவித்தருள்வன். அதனால் அவர்தம் மனம் மொழி மெய்கள் சீலத்தொண்டில் மேவி நிற்கும். சீலம் - சரியை.

     மந்த நிலையாவது சிவபெருமான் திருவடிக்கு மலர்தூவிப் போற்றிவரும் திருத்தொண்டால் சிவவழிபாட்டில் பெருகார்வம் அவர்க்கு வருமாறு செய்தருள்வன் சிவன். அதன் பொருட்டுச் சிவன் திருவடிக்கு ஆளாக்குவிக்கும் சிவகுரவனைத் தூண்டிச் செலுத்திச் சிறப்புத்தீக்கையினைப் புரிவித்தருள்வன். அவர்கள் அகம் புறங்களில் செய்யும் வேள்விகளையும், வழிபாடுகளையும் முறையுறப் புரியுமாறு புரிவித்தருள்வன். சிவகுரவன் - போதகாசிரியன். தூண்டிச்செலுத்துதல் - அதிட்டித்தல். வழிபாடு - நோன்பு.

     விரைவு நிலையாவது நோன்பின் வழிநின்றார்க்கு அகத்தவமாகிய செறிவின்கண் விழைவுண்டாகும். செறிவு - யோகம். அதுவும் ஆசானால் அந்நிலையில் அருளப்பெறும்.

     மிகுவிரைவு நிலையாவது செறிவின் வழிநின்றார்க்கு அறிவின்கண் வேட்கையுண்டாம் அந்நிலையில் அவ்வாசானாலேயே திருவடிப்பற்றும், முப்பொருள்தேற்றமும், பிறப்புச் சிறுமையும், சிறப்புப் பெருமையும், நல்லாரிணக்கமும், நற்றாள் வணக்கமும் மெய்ந்நூற்பயிற்சியும், அந்நூல் வேள்வியும், மறந்தும் புறந்தொழா மாண்பும், அறந்திறம்பாப் பணியும் புரிந்தொழுகுமாறு அருள்புரிந்து நிறுத்துவது.

     இந்நான்கு நிலையினையும் ஓர் ஒப்பால் கூறுங்கால் வாழை, பச்சை விறகு, காய்ந்தவிறகு, அடுப்புக்கரி இவற்றில் தீக்கொளுவச் செய்ய வேண்டிய முயற்சிமுறை போன்றாகும்.

வாழையே பச்சைவிற கோடுலர்வு வாய்ந்தகரி
மூளுந்தீ நான்மை முறை.
     ஆலின்கீழ் நால்வர் - சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன் என்பவராவர். கல்லால் நீழல் என்பது வடபெருங்கல்லாகிய திருவெள்ளித் திருமலைமேலுள்ள ஆலென்பதாம். மேலும் கல்வி கற்றற்குரிய விரிந்த நிழல் தரும் ஆல் என்பதுமாம்.

     ஆலமர் செல்வன் காட்டியருளுங் கைக்குறி அறிவடையாளம் என்ப. அறிவடையாள மெனினும் சின்முத்திரை யெனினும் ஒன்றே. இறையை யுணர்த்துவது பெருவிரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல், வினையை உணர்த்துவது நடுவிரல், மாயையை யுணர்த்துவது அணிவிரல் மலத்தினையுணர்த்துவது சிறுவிரல், பெருவிரலும் சுட்டு விரலும் பெம்மானருளால் புணர்ப்புற்ற காலத்து ஒன்றென்றும், இரண்டென்றுங் கூறவொண்ணாதபடி இரண்டிணை ஒன்றென நிற்கும் இங்ஙனம் நிற்குங்கால் ஏனை மூன்று விரல்களும் நீங்கி:நிற்கும். இதுவே அவ்வடையாளமாம். இவை முறையே இறையுயிர் மெய்க்கலப்பாம் புணர்பினையும் மும்மல நீக்கத்தினையும் குறிப்பனவாம்.