பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

62

தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண்
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்.) "ஆக்கையெனு . . . ஆகும்" - உடம்பென்று சொல்லப்படும் அழிந்த ஆற்றங்கரையை (அழியாதிருக்கக் கூடிய) உண்மைப் பொருளென்று கருதிவாழுந் தீவினையேனாகிய நான், (இரண்டிணை ஒன்றாகிய) மெய்ப்புணர்ப் பென்னும் அத்துவிதத்தில் வேணவாக் கொள்ளுதல் உறுப்புக்குறைபாடுடைய முடவன் ஒருவன், எட்டுதற்கரிய இடத்தினுள்ள கொம்பில் வைக்கப்பட்ட தேனை விரும்பியதோடொக்கும்;

     "அறிவு அவிழ . . . நிற்க" - (எளியேனது) அறிவானது நன்றாக விரியும்படி, இன்பம் மெய்யுணர்வின்கண் நிறையும்படிக்குள்ள வழிவகை உண்டாகுமோ? இந்நாள்வரை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நாற்படியினுள் மூன்றினும் முறையே பழக்கங் கொள்ளாது விட்டுவிட்டதெல்லாம் நன்னெறி யாகாது; அவை நிற்க;

     "என்மார்க்கங்கள் . . . என்றுகாண்" - எவ்வகையான நெறிகளிலும் அணுகப் பெறாத மெய்யுணர் வென்னும் மூதறிவாய், மாற்றம் மனங்கழிய நின்றுள்ள முழு நிறைவாய் விளங்கும் மெய்ப்பொருள் எளியேனுக்கு வந்து வாய்க்கும்படி சூழ்ச்சியாகிய வழிவகையொன்றினை வருவித்துத், தெவிட்டுத வில்லாத பேரின்ப வண்ணமான மாளா நன்மைப் பெருங்கடலினை உணர்வினுள் உண்டு நிறைவித்து மூழ்கி இன்புற நீ முன்னின்றருள்வது எந்நாளில்?

         "சிரகிரி . . . குருவே"

     (வி - ம்.) ஆக்கை - உடம்பு. அத்துவிதம் - புணர்ப்பு. வாஞ்சை - வேணவா; ஆசை. அழிவு அவிழ - அறிவு விரியும்படி. உபாயம் - சூழ்ச்சி. வாரி - கடல்.

     உடம்பு மெய்யெனப் படும் தத்துவங்களால் ஆக்கப்படுதலின் ஆக்கை எனப்படும். இடிகரை என்பது ஆற்றோரங்களில் வெள்ளத்தால் கீழறுக்கப்பட்டு இடிந்து காணப்படும் கரைப்பகுதிகள். திருவடிப்பேறாகிய ஆண்டானும் அடிமையும் ஒன்றாகக் கூடி அடிமை முடிவிலா இன்பெய்துந்தன்மை சொல்லற்கரிது. இவ்வுண்மை வருமாறு காண்க:

"புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
    புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம
 அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
    அருங்கலைகள் பல தெரிந்தும் ஆரணங்கள் படித்தும்