பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

648
தம்முனைப்பற்றவராய் ஒழுகுவர். அந்நிலையே அனைவர்க்கும் வேண்டும் என்பதாம்.

(3)
என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின்
நன்னெறியைக் கண்டுரிமை நாஞ்செய்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) (விழுமிய முழுமுதல்வன் ஆருயிர்கட்குள் அடிமைக்கு ஆண்டவனாய், மகன்மைக்குத் தந்தையாய்த் தோழமைக்குத் தோழனாய்த் துணைபுரிந்தருள்கின்றனன், எனினும் தோழனாய்த் துணைபுரிதல் மிக மேலாகும் அதனால்,) நம்பியாரூரர் தாம் பாடியருளிய திருவாரூர்த் திருப்பதிகத்தில் "என்னுடைய தோழனுமாய்" என்றருளினர்; அத் திருப்பாட்டின் மெய்ம்மையினைத் திருவருளால் உள்ளத்திற்கண்டு அடியேன் சிவத்தொண்டு புரியுநாள் எந்நாளோ?

(4)
ஆருடனே சேரும் அறிவென்ற அவ்வுரையைத்
தேரும் படிக்கருள்தான் சேருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) ஆருயிரின் அறிவு சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையதெனினும் நிலையாக ஆருடனே சேரும் என அம் மறையை உன்னின் (சிவபெருமானுடன் சேர்தல் என்றாகும்.) அஃது யாருடன் அணைய அருளுகின்றதோ அத்தகைய திருவடியுடன் சேருநாள் எந்நாளோ?

(5)
உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்னிதயந்
தன்னில்உன்னி நன்னெறியைச் சாருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மெய்யடியார்கள் திருவருளால் நினைக்க எண்ணின் தேவரீரும் உடல் நினைந்தருள்கின்றீர். இவ்வுண்மையினை அவ்வடியார்கள் திருவாய் மலர்ந்தருளிய மறைமொழியினைப் பெரு மொழியாக அடியேன் உள்ளத்திற்கொண்டு அத்தகைய நன்னெறியினைச் சாரு நாள் எந்நாளோ? அப்பர்பெருமான் அருளியதென்ப.

(6)
நினைப்பறவே தான்நினைந்தேன் என்றநிலை நாடி
அனைத்துமாம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மணிவாசகப் பெருமான் "இன்றெனக்கருளி" எனத் தொடங்கும் தனித்தமிழ்த் திருமாமறைத் திருப்பாட்டில் "நினைப்பற நினைந்தேன்" எனத் திருவருளை முன்னிட்டு அறிந்தேன் என அருளினர். அந் நிலையினை அடியேன் நாடி எல்லாமாய் நின்றருளும் சிவமாம் மெய்ப்பொருளின்கண் திருவருளால் அழுந்துநாள் எந்நாளோ?

(7)
சென்றுசென் றேயணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாகி
நின்றுவிடும் என்றநெறி நிற்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) முன் ஓதிய திருப்பாட்டில் பசுஞானமானது சிறிது சிறிதாக நழுவிப் பதிஞானம் வளர்பிறைபோல் வளர்ந்து முற்றுமாய்த்