பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


668


ஓயாவுள் ளன்பாய் உருகிவாய் விட்டரற்றிச்
சேயாகி எந்தைநின்னைச் சேரவைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) இடையறாது உள்ளன்புடையவனாய் நெஞ்சங் கரைந்துருகி வாய்விட்டலறிப் பிள்ளை போன்று நின் திருவடியினைச் சேரும்படி வைத்தருளினால் ஆகாதோ?

(14)
ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்றபரஞ்
சோதிநீ என்னைத் தொழும்பனென்றால் ஆகாதோ.
     (பொ - ள்) எல்லாவற்றிற்கும் முதல் வாழ்வாகி வேறுபிரிக்கப்படாத புணர்ப்பாகி நின்ற மேலாம் திருவருட் சோதியே, நீ அடியேனை நின் தொண்டன் என்றருளினால் ஆகாதோ? புணர்ப்பு - அத்துவிதம்.

(15)
விண்ணாரக் கண்ட விழிபோற் பரஞ்சோதி
கண்ணார நின்நிறைவைக் காணவைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) வானத்தினை எவ்வகைத் தடையுமன்றி முற்றாகப் பார்க்கும் கண் போன்று மேலான திருவருட் சோதியே நின் முழு நிறைவினை அடியேன் கண்ணாரக் காணும்படி வைத்தருளினால் ஆகாதோ?

(16)
சேராமற் சேர்ந்துநின்று சின்மயனே நின்மயத்தைப்
பாராமற் பாரெனநீ பட்சம்வைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) (மெய்ப்புணர்ப்பாகிய அத்துவிதக் கலப்பால், ஒரு பொருளேயாகிவிடாமல் இரண்டறக் கலந்து சேர்ந்து நிற்பதாகிய) சேராமற் சேர்ந்து நின்று வாலறிவனே, நின்திருவருளுருவினை நான் என்னும் முனைப்புடன் பாராமல் திருவருள் முனைப்புடன் நோக்குவாயாகவென்று தண்ணளி புரிந்தால் ஆகாதோ?

(17)
கண்ணாடி போலஎல்லாங் காட்டுந் திருவருளை
உள்நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) கண்ணாடியின்கண் எதிர்முகமாய்ப் பொருள்கள் தோன்றுவது போன்று புறப்பொருளாகிய உலகமும் அகப்பொருளாகிய தத்துவங்களும் காணும்படியருளும் திருவருளை ஐயனே அடியேன் மனத்தான் நோக்கிக் காதலால் உள்ளம் உருகும்படியாக வைத்தருளினால் ஆகாதோ?

(18)
மூலஇருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருட்
கோலம்வெளி யாகஎந்தை கூடுவித்தால் ஆகாதோ.
     (பொ - ள்) பிறவிக்கு மூலமாகிய ஆணவ வல்லிருள் தோற்றுப்போகவும் மூதறிவு என்று சொல்லப்படும் திருவடிப் பேருணர்வு விளங்கவும், திருவருட் கோலம் வெளிப்படவும் எந்தையே நீ சேர்ப்பித்தா லாகாதோ?

(19)