பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


675


     (பொ - ள்) எந்தையே! நின் திருவிளையாடல்கள் அளவிடற்கு அரியன. அவை இவ்வளவென்று அவ்வளவையும் எளியேனால் அறியும் தன்மையுண்டாமோ? கேட்டருள்வாயாக.

(16)
தேடுவார் தேடுஞ் சிவனேயோ நின்திருத்தாள்
கூடுவான் பட்டதுயர் கூறற் கெளிதாமோ.
     (பொ - ள்) தேடுதற்குரிய தகுதிவாய்ந்த செம்பொருட் டுணிவினராம் சித்தாந்தச் செல்வரால் தேடப்படும் சிவபெருமானே, நின் திருவடியினை அடியேன் கூடுதற்காகப் பட்டதுயர் சொல்லுவதற்கு எளிதோ? (அல்லவென்க.)

(17)
பற்றினதைப் பற்றும்எந்தாய் பற்றுவிட்டாற் கேவலத்தில்
உற்றுவிடும் நெஞ்சம்உனை ஒன்றிநிற்ப தெப்படியோ.
     (பொ - ள்) அடியேனுடைய மனமானது ஏதாவதொரு பொருளைப் பற்றின் அதனையே பற்றிக்கொண்டிருக்கும். அப் பற்றினைவிட்டால் புலம்பு என்று சொல்லப்படும் கேவல நிலையினை அடையும். அத்தகைய மனம் தூய நிலையிலுள்ள உன்னோடு கூடி நிற்பது எப்படியோ? தூயநிலை - சுத்தாவத்தை.

(18)
ஒப்பிலா ஒன்றேநின் உண்மையொன்றுங் காட்டாமல்
பொய்ப்புவியை மெய்போற் புதுக்கிவைத்த தென்னேயோ.
     (பொ - ள்) தனக்குவமையில்லாத ஒரு முதலே! நின்னுடைய வுண்மையினை அடியேனுக்குக் காட்டியருளாது நிலையில்லாதுதோன்றி யொடுங்கும் காரியப் பொருளாகிய இவ்வுலகினை நிலைக்கும் மெய்போலப் புதுக்கி வைத்தருளியது என்னையோ? பொய் - நிலையில்லாதது. மெய் - நிலையுடையது. இவை முறையே காரிய காரணங்கள் எனவும் படும்.

(19)
காலால் வழிதடவுங் காலத்தே கண்முளைத்தாற்
போலே எனதறிவிற் போந்தறிவாய் நில்லாயோ.
     (பொ - ள்) கண்ணின்றிக் காலால் வழிதடவி உழலுங் காலத்தில் கண் உண்டானது போன்று திருவருளானன்றி எளியேனுடைய முனைப்பறிவினால் நின்திருவடியினைத் தேடிக்கொண்டிருக்கும்போது, என்னறிவினிடத்துத் திருவருளால் எழுந்தருளிவந்து நிற்கமாட்டாயோ?

(20)
தன்னரசு நாடாஞ் சடசால பூமிமிசை
என்னரசே என்னை இறையாக நாட்டினையோ.
     (பொ - ள்) இறைவனே! அறிவில்லாத பாசக் கூட்டமாகிய தத்துவங்கள் தன்னரசாகச் செலுத்திவரும் இவ்வுலகில் எளியேனை அதற்குத் தலைவனாக நாட்டினையோ? இறை - தலைமை.

(21)