மும்மலங்காண் நீங்குவிரல் மூன்றும் பெருவிரல்சுட், டம்மிறையோ டாவிப்புணர்ப்பு எனக் கண்டு கொள்க. சங்கர, சங்கர, சம்பு என்பதனை யாண்டும் கூட்டிக்கொள்க.
(1)
சொன்னசொல் லேதென்று சொல்வேன் - என்னைச் | சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி | முன்னிலை ஏது மில்லாதே - சுக | முற்றச்செய் தேஎனைப் பற்றிக்கொண் டாண்டி - சங்கர |
(பொ - ள்) அங்ஙனம் குறிப்பாற் குறித்த சொல்லின் விளைவாகிய நுகர்வெனப்படும் அனுபவத்தினை யாதென விளம்புவேன்? அடியேனைச் சூழ்ச்சியாகத் தனித்து மவுனமாக இருக்கச் செய்து. பொறிகளின் வழியாகக் கொள்ளப்படும் புலன்களின் சுட்டு ஏதுமில்லாமல் சிவப் பேரின்பம் மேலிடச் செய்து, அடியேனைத் திருவருளினால் ஆளாக்கிப் பற்றிக்கொண்டனன். புலன்கள் - மாயா காரியமாகப் புறத்துக்காணப்படும் நுகர்பொருள்கள். பொறிகள் - கண் முதலிய இந்திரியங்கள்.
(2)
1பற்றிய பற்றற உள்ளே - தன்னைப் | பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே | பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும் | பேசாத காரியம் பேசினான் தோழி - சங்கர |
(பொ - ள்) உலகியற் பொருள்களில் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றுமற1 எளியேன் நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி கூறினேன். அவ்வாறு பற்றித் திருவருளால் நோக்கினவிடத்து அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அவ்வின்பம் தன்னுகர்வாகிய சுவானுபூதியன்றிப் பிறர்க்குச் சொல்லொண்ணாத தாகும். அதனையே தோழி! குறிப்பாற் பேசியருளினான். அதுவே பிறருக்குச் சொல்லாத சொல்.
(3)
பேசா இடும்பைகள் பேசிச் - சுத்தப் | பேயங்க மாகிப் பிதற்றித் திரிந்தேன் | ஆசா பிசாசைத் துரத்தி - ஐயன் | அடியிணைக் கீழே அடக்கிக்கொண் டாண்டி - சங்கர |
(பொ - ள்) ஏடீ! அடியேன் முதல்வன்பாற் கொண்ட பெருவேட்கை எனப்படும் மோகத்தினால், பேசக்கூடாத துன்பம் விளைக்கக் கூடிய பழிமொழிகளைப் பகர்ந்து, வெறும் பேயுருவாகிப் பிதற்றித் திரிந்தேன், ஐயன், அடியேனைத் தன்திருவடிக்கீழ் அடக்கிக்கொண்டருளினன்.
1. | 'பற்றுக'. திருக்குறள், 350. |