(பொ - ள்) இருள் போன்றது என்பதும் அல்லாமல் பூத ஒளி போன்றது என்பதுமல்லாமல், எத்தகைய பொருள்களும் தன் அகல் நிறைவாகிய பெருவியாபகத்துள்ளே தங்க ஒப்பற்ற தனி முதற் பொருளாகும். புறச் சமயத்தவர்க்கு உள்ளது என்பது அல்லாமல், அகச் சமயத்தினர்க்கு இல்லது என்பதுமல்லாமல் உலகமனைத்தும் தொழும் படியாகவிருந்த அயனும் மாலும் முதலானோர்கள் அனைவரும் கவலைகொண்டு புறச்சமய நெறிகளாகிய பாழ்ங்குழியில் வீழ்ந்து அலையும்போது அவர்மாட்டுப் பேரிரக்கம் புரிந்து திருவருள் புரியும் வகை சொல்லற்கரிய இவ்வுலக மாயையானது நீங்கும்படி,
எனதென் பதையிகழந்த அறிவின் திரளினின்றும் | அறிவொன் றெனவிளங்கும் - உபயம தாக | அறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று | அசரஞ் சரமிரண்டின் - ஒருபடியாகி | எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனைஇறந்த | தெதுமங் களசுபங்கொள் - சுகவடி வாகும் | யாதுபரமதை நாடியறிநீ. |
(பொ - ள்) எனதென்னும் புறச் செருக்காகிய மமகாரத்தை வெறுத்து, அறிவின் கூட்டத்தில் நின்றும், சிவஞானமொன்றே விளங்குகின்றது இரண்டாக அறியுந்தன்மையுடையதல்ல, வேறாக நீங்குந் தன்மையுடையதுமல்ல. நிலைத்துணையாகிய அசரமும் இயங்கு திணையாகிய சரமும் ஆகிய இருவகை யுலகத்துள்ளும் ஒரே தன்மையுடையதாகி எக்காலமும் யாண்டும் முழு நிறைவாக விருப்பது எந்தப் பொருள்? மனத்திற் கெட்டாத பொருள் எது? மங்களமாகிய நலநிறை பேரின்ப வடிவமாகியது எது? அஃது எந்தப் பரம்பொருளோ? அந்தப் பரமான்மாவை ஆன்மாவாகிய நீ விரும்பி யுணரக் கடவாய்.
பருவங் குலவுகின்ற மடமங் கையர்தொடங்கு | கபடந் தனில்விழுந்து - கெடுநினை வாகி | வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு | வசனந் திரமுமின்றி - அவரித ழுறல் | பருகுந் தொழிலிணங்கி இரவும் பகலும்இன்சொல் | பருகும் படிதுணிந்து - குழலழ காக | - மாலைவகைபல சூடியுடனே, |
(பொ - ள்) மங்கைப் பருவங்கொண்டு விளங்குகின்ற இளம் பெண்கள் அவர்களுக்குள்ள இயற்கைக் குணத்தால் தொடங்குகின்ற வஞ்சகச் செயலில் முழுகிக் கெட்ட எண்ணத்தை யுடையதாக்கி, வலையின்கண்ணே சிக்கிக் கொண்ட மானையொத்துப் பிறர்வயப்பட்டுச் சொல்லுஞ் சொல்லில் உறுதியில்லாமல், அம் மங்கையர்களுடைய இதழமிழ்தம் உண்ணுந் தொழிலுக்கு இசைந்து' இரவும் பகலும் அம் மங்கையருடைய