பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


74


கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள்
    களிம்புதோய் செம்பனையயான்
  காண்டக இருக்கநீ ஞானஅனல் மூட்டியே
    கனிவுபெற உள்ளுருக்கிப்
பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு
    பரிசித்து வேதிசெய்து
  பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட
    பக்ஷத்தை என்சொல்லுகேன்
அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
    ஆதியாம் அந்தமீதும்
  அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை
    யான வர்க ளறிவினூடுந
திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்) "கருமருவு . . . . . . . . சொல்லுகேன்" - கருப்பையிற் பொருந்திய குகையை யொத்த உடம்பின் நடுவில் (இயல்பாகத் தொன்மையிலே) களிம்பு பொருந்திய செம்பைப் போன்று (மலத்தோடு கூடிக்கிடந்த) யான் காணுமாறிருக்கின்றபோது (அந்தண்மைமிக்க ஆண்டிவனே) நீ மூதறிவுப் பெருந்தீயினை மூள்வித்தருளி (எளியேன் உள்ளம்) இளகும்படி உள்நின்று உருகுவித்துத் தக்க செவ்விவாய்ந்தது நோக்கியருளி, நின்னுடைய பொன் மருந்தென்னும் திருவருளாம் குளிகையினைக்கொண்டு தோய்வித்துக் களிம்பகற்றி மாற்றுயர்ந்த பத்துமாற்றுப் பசும்பொன் னாக்கியருளி (மீளா ஆளாய் அடிமைகொண்டருளி) பணி செய்யுமாறு கொண்டருளிய நின் அளப்பருந்தண்ணளியாம் பெருங் கருணையினை (அடிமையின் புல்லிய நாவால்) என்னென்று நவில்வேன்;

    "அருமைபெறு . . . . . முதலே" - அருமை மிகுந்த பொருள்சேர் புகழ்நிறைந்த (மறைமுடிபும் முறைமுடிபுமாகிய) வேதாந்த சித்தாந்த முதலாகச் சொல்லப்படுகின்ற முடிவுகளின்மீதும், மெய்ப்புணர்ப்பின் நிலைமையினை யுடையராகி, எளியேனை ஆட்கொண்டருளி, நின்னுடைய பழவடியார்தம் கிழமை உணர்வினிடத்தும், திருவருட்பெருஞ் செல்வம் நனிமிகப் பொருந்தியுள்ள (கற்றற்குரிய பெருநிலையம் எனப்படும்) கல்லாலமரத்தின் அடியின் கீழும் சிறந்து வீற்றிருந்தருளும் திருமாமுறை முடிவாம் செம்பொருட்டுணிவின் தனிப்பேற்றின் இனித்த முழுமுதலே!